திருவெம்பாவை – 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு
பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும்; மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியும், மேலுள்ள உலகங்கள் அனைத்திற்கும் மேலானதாய் முடிவிடமாய் இருக்கிறது. உமையொருபாகன் என அழைக்கப்படும் உமையை ஒருபாகத்தில் கொண்ட சிவபிரான்       ஒரேவகையானவன் அல்லன்; அவன் எல்லாமும் ஆனதால் ஒருவனேயும் அல்லன். வேதங்களும் வானவரும் மானுடரும் துதித்த போதும் அவன் புகழ் வற்றாதது; அவனோ இணையற்ற உயிர்த்தோழன். அவனுக்கு அடியாரோ கணக்கற்றவர்கள்.. அத்தகைய குற்றமற்ற குலத்தவனான அரனின் கோவிலைச் சார்ந்த பெண்பிள்ளகளே! அவனது ஊர் எந்த ஊர்! எதை அவனது பெயர் என்று கூறுவது? அவனுக்கு யார் உறவினர், யார் அயலவர். அவனை என்னவென்று சொல்லிப் பாடுவது!’ என்று  சிவபெருமானின் பெருமைகளைப் போற்றிக் கூறுகிறது இப்பாசுரம் ..