திருப்பாவை, திருவெம்பாவை அறிமுகம்

மார்கழியில் ஆண்டாளின் பாசுரங்களைக் கேட்பதை விட உன்னதமானது வேறு எதுவுமில்லை. திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக பல வியாக்கியானங்களைப் பெற்றுள்ள  ஒரே திவ்வியப் பிரபந்தம் திருப்பாவை. மார்கழியை போலக் கொண்டாடியவர்கள் ஒருவருமில்லை. சகல வேத உபநிஷத்துக்களின்  அர்த்தங்களை எல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கும் திருப்பாவை, பாதகங்கள் தீர்க்கும் பரமானடி காட்டும் வேதம், அனைத்துக்கும் வித்து என ஆச்சார்யர்கள் போற்றியுள்ளனர்.

“நின் வாசகம் நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” என்று திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கு நன்றி தெரிவிக்கிறார் ராமலிங்க அடிகளார். பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஓர் அங்கம் திருவெம்பாவை. சிவனுக்கும், சிவனடியார்க்கும் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை.

மார்கழி மாதம் துவங்க இருப்பதால் ஆர். கிருஷ்ணமூர்த்தி எழுதும் – தினம் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை குறிப்புகள் நம் விஜயபாரதம் மின்னிதழில் மார்கழி மாதம் முழுவதும் வெளியாகும்.