திருப்பள்ளியெழுச்சி – 8

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

விளக்கம்
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாக பத்து பாடல்கள் கொண்ட திருப்பள்ளியெழுச்சியை அருளிச் செய்தார். திருப்பள்ளியெழுச்சி என்பது, சுப்ரபாதம் என வடமொழியில் வழங்கும். வைகறையில்-அதிகாலைப் பொழுதில்- இருள்நீங்க ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவதுமாம்.

என்னை ஆட் கொண்ட ஆராவமுதனான சிவபிரானே ! மெல்லிய விரல்களையுடைய உமையாம்பிகையுடன் எளியவர்களான அடியவர் இல்லங்களுக்கும் எழுந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்த முதல்வனாய் இருக்கின்றாய். எல்லாருக்கும் நடுநாயகமானவனாகவும் இருக்கின்றாய், அழிக்கும் தெய்வமாகவும் இருக்கின்றாய்.

பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்றிருக்கும்பொழுது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். மலர்வனங்கள் மற்றும் பொய்கை சூழ் திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். மாண்புமிகு அந்தணனின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.