பொங்கல் ஊரை ஒன்றுபடுத்தும் பாரம்பரிய உன்னதத் திருவிழா!

தமிழகத்தின் எல்லா பிரிவு மக்களும் அவரவர் மரபுப்படி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் நேர்த்தியை அலசுகிறது இந்த கட்டுரை.

தொண்டைமண்டலத்தில்…

* மார்கழியின் கடைசி நாள் – போகியில் குளிருடன் தேவையில்லாதவைகளை தீயில் பொசுக்கி, உடுக்கை போல் ஓர் தாளப் பொருளை தட்டி பிள்ளைகள் ஓசையெழுப்புவர்.

* தை மாதத்தின் முதல் நாள், ‘பெரும் பொங்கல்’ புது நெல்லு, மஞ்சள், இஞ்சி என வைத்து பொங்கல் பொங்கி சூரியனை அனைவரும் வணங்குவர்.

* மாட்டுப் பொங்கல் அன்று தம் வீட்டில் யார் யார் காளை, பசு, கன்று வளர்க்கிறார்களோ அவர்கள் நன்றாக அவைகளை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம் இட்டு வண்ணம் தீட்டி அவைகளை வணங்கி பொங்கலும் வைத்து வணங்குவர்.

* காணும் பொங்கல் அன்று நம் குடும்பத்தில் மூத்தவர்களான தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா எனப் பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துக்களை பெறுவர். அவர்களும் மறுநாள், காட்டுத் திருவிழா உள்ளதால் அவர்களுக்கு ஆசியுடன் பணமும் தருவார்கள்.

* ஆம்பூர் அருகே ‘ஆனை மடுகு’ (காட்டுப் பகுதி) என்னுமிடத்தில், ‘ஆஞ்சநேயர் பாதம்’ உள்ளது. இலங்கைக்கு சீதாபிராட்டியை ஆஞ்சநேயர் தேடிச் சென்றபோது அங்கு நின்றதாக ஐதீகம். ஆம்பூரிலுள்ள ‘ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உற்சவரை’ காலை 6 மணிக்கு எடுத்துச் சென்று மாலை 6 மணி வரையில் அனைவர் தரிசனத்திற்கும் வைப்பார்கள். ஊர்மக்கள் அங்கு வேண்டுதல்படி பொங்கல் வைத்து, பெருமாளின் ஆசி பெறுவார்கள். இதுவே காட்டுப் பொங்கல்.

– ஆம்பூர் வெங்கடேசலு

நாட்டுக்கோட்டையில்…

பொங்கல் வருஷா வருஷம் காரைக்குடி தாண்டி, தல்லாம்பட்டி – எங்கள் சொந்த ஊரில்தான். புதுக்கோட்டை மாவட்டம். குலதெய்வம் சிவனுக்கு வீட்டுக்கு வீடு புது அரிசி சேகரித்து ஐயரிடம் கொடுத்து பொங்கல் வைத்து மத்தியானம் பூஜையில் வைத்துத் தருவார்கள். கிராம தெய்வம் முனீஸ்வர ஐயனார் – நெற்கதிர் அறுவடை ஆனதும் ஒரு மூட்டை அள்ளி பொங்கல் வைப்பது விசேஷம். முனீஸ்வரன் கோயிலில் எல்லோரும் தனித்தனியாக புதுப்பானை, கரும்பு, பொங்கல் விடுவோம். தீட்டு, இறந்த வீடு என்றால் பொங்கல் விடமாட்டார்கள். அவர்கள் வீட்டிற்குக் கொண்டுபோய் கொடுப்போம்.

மாட்டுப் பொங்கல்: ஜல்லிக்கட்டு தான் இல்லையே. எங்கள் மாட்டினைக் குளிப்பாட்டி, கொம்பிற்கு வர்ணம் தீட்டி, கரும்பைக் கழுத்தில் கட்டி அவுத்து விடுவோம். வீட்டுப் பசங்க மாட்டைப் பிடித்து கரும்பை உருவி கடித்து உண்பர். பிடிபடாமல் எங்கள் மாடு வீடு திரும்பினால், வாசலில் குழிதோண்டி பொங்கல் வைத்த அடுப்புக்கரி போட்டு தண்ணீர் ஊற்றி உலக்கை போட்டு வைத்திருப்போம். திருஷ்டிக் கழிப்பிற்கு! அதைத் தாண்டி வரும். வீர மாட்டிற்கு தேங்காய் கீற்றுடன் வீட்டு சர்க்கரைப் பொங்கல் படைப்போம்.

பொதுவாக சூரிய பொங்கல் எனில் நல்ல நேரம் பார்ப்பது இல்லை. எங்கள் மூதாதையர் பழக்கம் பின்பற்றி நாங்கள் நல்லநேரம் பார்த்து சாயங்காலமே பொங்கல் விடுவோம்!

காணும் பொங்கல் அன்று கபடி, சைக்கிள் ரேஸ், கண் கட்டி பானை உடைப்பது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள் சிறு வயதினர்.

– தன்ராஜ், ஆட்டோ ஓட்டுநர், சென்னை

தென் மாவட்டங்களில்…

சிறு வீட்டுப் பொங்கல் பாரம்பரியமிக்க பண்பாட்டு பொங்கல். தென் மாவட்டங்களில் இது மிகவும் முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது நகரங்களில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடுவது மிகவும் குறைந்துவிட்டது. கிராமங்களில் இன்றும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

குடும்பம் தழைத்து குலவிருத்தி அடையவும், வீடுகளில் கன்னிப் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் பொருட்டும் வாசலில் சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்துவைத்து அதில் பூசணிப் பூவை அழகுபட வைப்பர். மேலும் இதற்கு வேறு கதையும் உண்டு. மகாபாரதப் போர் நடந்தது மார்கழி மாதத்தில்தான். பாண்டவர்கள் தங்கியிருந்த வீடுகளை அடையாளம் காண்பதற்காக வியாசர், வீட்டு வாசலில் சாணம் இட்டு பூ வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாராம். இந்த அடையாளத்தைக் கொண்டு போர் நடக்கும் சமயத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்கள் தாக்காமல் இருப்பதற்காக கண்ணபிரான் பாதுகாப்பு அளித்தார். அன்று முதல் இந்த வழக்கம் இருக்கிறது என்று கூறுவர்.

மார்கழி மாதம் முப்பது நாளும் வாசலில் வண்ணக் கோலமிட்டு சாணத்தை பிள்ளையார் பிடித்து அதில் பூசணிப்பூ வைப்பார்கள். (காய் காய்க்கும் பூ தான் வைக்க வேண்டும்). இந்த பூ பிள்ளையாரைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். வீட்டு வாசலில் செம்மண் கொண்டு சிறு வீடு கட்டி காவி அடித்து கோலமிடுவார்கள். சிறு வீட்டில் சமையலறை, பூஜையறை கூடம், திண்ணை என்று பல அறை வைத்து கட்டுவார்கள். கட்டிய சிறுவீட்டில் தைமாதம் தைப்பூசத்திற்கு முன்பு ஒரு நல்ல நாளில் பொங்கல் வைத்து வழிபடுவர். வீட்டிற்குள் விளக்கு வைத்து வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், கரும்பு, காய்கறிகள் படைத்து பொங்கலிட்டபின் சிறுவீட்டில் பால் காய்ச்சி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து பூஜிக்க வேண்டும். பிறகு சேகரித்த (பிள்ளையார்) சாண உருண்டைகளை ஒரு தாம்பாளத்தில் வைத்து எருக்கம் இலைகள் பழம், பால், பொங்கல் சேர்த்து படைத்து பூஜித்து அதன்பின் சிறு வீட்டுப்பாலை குழந்தைகளுக்கும்   அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

பொங்கல் விட்டவுடன் அப்பூக்களை அவ்வீட்டில் இருக்கும் கன்னிப்பெண்கள் கையால் வாய்க்கால் அல்லது ஆற்றங்கரையோரம் கொண்டு விட்டுவிடுவர்.

வாடாமல் வதங்காமல் விட்டேன்னடி பூவு,

வாய்க்கால் கரையோரம் விட்டேனடி பூவு”

என்று பாடி கும்மியடித்து குலவை சத்தத்தோடு பூக்களை அனுப்புவர். இதுவே சிறுவீடு பொங்கல் வழிபாடு. வீடு திரும்பும் அவர்களை வீட்டார்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.

கொங்கு மண்டலத்தில்…

விவசாயப் பெருங்குடி மக்கள் வீடுகளில் சாணம் கரைத்து மெழுகி சுண்ணாம்பால் கரை கட்டுவார்கள். பொங்கல் பொங்கி படைப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று பசுத் தொழுவத்தை வீட்டார் பட்டியாரே, அசனம் பட்டியாரே!” என்று கூறியபடியே வலம் வருவார்கள். அவர்கள் கையில் பசு, கன்று, காளைக்கான பொங்கல் பிரசாதம் இருக்கும்.

ஆற்றங்கரையிலே…

துறைப் பொங்கல் வைப்பார் சலவைத் தொழிலாளி. ஆம். ஆற்றின் படித்துறைதான் அவருக்கு சோறு காட்டுகிறது என்பதால் படித்துறைக்கு பொங்கலிட்டு பூஜை செய்வார். ‘தமிழ் பேரகராதி’ தொன்மைக்காலத் தமிழகத்தில் துறைப்பொங்கல் நடைபெற்றதாக தகவல் தருகிறது.

வீட்டு முற்றத்திலே…

கணவர் தன்னுடன் மனம் ஒன்றி மனைவி வாழ வேண்டி காக்கைக் கூட்டத்தை உபசரிப்பாள். பொங்கலுக்கு மறுநாள் மஞ்சள் செடியின் இலையில் பொங்கலை படைத்து வெற்றிலை பாக்கு பழம் நிவேதனம் செய்து உன் கூட்டம் பிரிந்தாலும் என் கூட்டம் பிரியாமலிருக்கணும்” என்று வேண்டுவாள் மனைவி.

மலையடிவாரத்தில்…

அறப்பளீஸ்வரர் எட்டுக்கை அம்மன் அருளாட்சியில் இயற்கை அன்னையில் தாலாட்டில் சிறந்து விளங்குகிறது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை. இங்கு வாழும் மக்கள் அனைவரும் தங்களை மலையாளிகள் என்றே அழைத்துக்கொள்ளும் வனவாசித் தமிழர்கள். மலையை ஆட்சி செய்வதால் தங்களை மலையாளிகள் என்று அழைத்துக் கொள்வார்களாம். இங்கு நடைபெறும் சங்கராந்தி எனப்படும் பொங்கல் விழா இவர்களின் ஊனிலும் உயிரிலும் ஹிந்துத்துவம் கலந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது. வனவாசி மக்களுக்காகவே சேவை செய்துவரும் சோமு கூறுகிறார்:

பொங்கலுக்கு ஒருவாரம் முன்பே வீடுகளை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை வெளியேற்றி விட்டு, வெள்ளையடித்து வாளம்புல், பூளைப்பூ, செங்கீரைப்பூ, மாவிலைத் தோரணம் கட்டி வீட்டை அலங்கரிப்போம். பொங்கல் வைக்கும் வீடுகளில் சிலர் விரதம் இருப்பார்கள். இவர்கள் பொங்கலன்று இரவே உணவை அருந்துவார்கள். காலையில் சூரியப் பொங்கல் என்றும் மாலையில் சந்திரப் பொங்கல் என்றும் வைப்பது இவர்களுடைய பாரம்பரியம்.

இங்கு வாழும் மக்கள் பல்வேறு கோத்திரங்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒரே விதமாகவே வழிபாடு செய்வார்கள்.

ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு பெருமாள் கோயில் உண்டு. அந்தக் கோயிலுக்கென்று ஒரு காளையும் உண்டு. அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்தக் கோயிலின் பக்தர்கள். ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டுப் பசு, காளைகள் இருக்கும் தொழுவத்தை சுத்தப்படுத்தி, தோரணங்கள் கட்டி பசுவினங்களைக் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் அணிவித்து வணங்கி மகிழ்வோம்.

பொதுவான கோயில் காளையை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பாதுகாத்து வருவார். பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கோயில்காளையை கோயிலின் முன்பு நிறுத்தி பிரசாதங்கள் அளித்து, பூஜைகள் செய்தபின் ஒவ்வொரு வீட்டுக்கும் அழைத்துச் செல்வார்.

அந்த வீட்டினர் வாசல் தெளித்து கோலமிட்டு வாழையிலை வைத்துக் காத்திருப்பர். ஒரு கலச நீரில் மஞ்சள் பொடியையும் அருகம்புல்லும் கலந்திருக்கும். இன்னொரு சொம்பில் சுத்தமான நீரும் இருக்கும். கோயில் காளை வந்ததும் அந்த வாழை இலையில் தன் முன்னங்கால்களையும் வைக்கும். மஞ்சள் நீரால் அதனுடைய கால்களை தாய்மார்கள் கழுவுவார்கள். மீண்டும் நன்னீரால் சுத்தப்படுத்துவார்கள். குடும்பத்திலுள்ள அனைவரும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவார்கள். காளையுடன் வந்த கோஷ்டி மணியடித்து, சங்கு ஒலித்து ராமாயணக் கதைகளைக் கூறுவார்கள். பின்னர் தாரை தப்பட்டை முழக்கி ஆடிப்பாடி மகிழ்விப்பார்கள். பின்னர் அந்தக் குடும்பம் செழித்து வாழ மந்திரங்களை ஓதுவார்கள். குடும்பத்தினர் அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தானிய வகைகளுடன் ரூ.100, 50 என தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப தட்சிணை தருவார்கள். வசதி மிகுந்தவர்கள் வேட்டி, துண்டு பரிசளிப்பார்கள்.

One thought on “பொங்கல் ஊரை ஒன்றுபடுத்தும் பாரம்பரிய உன்னதத் திருவிழா!

Comments are closed.