திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – மத்திய மந்திரியிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. மனு

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலை, தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், ‘திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கு இணையாக ஒட்டுமொத்த இலக்கியத்துறையில் எதுவும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் 20 குறள்களை குறிப்பிட்டு பேசினார். இது புகழ்பெற்ற இந்த இலக்கியத்தை (திருக்குறள்) ஏன் தேசிய நூலாக அறிவிக்கக்கூடாது? என்பதையே உணர்த்துகிறது.

திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த படைப்பு அல்ல. மத சார்பு இல்லாத திருக்குறள் மட்டுமே தேசிய நூலாக சேவையாற்றுவதற்கு தகுதி படைத்தது. திருக்குறளை தேசிய இலக்கிய படைப்பாக அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தமிழகத்தில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். திருக்குறளை தேசிய நூலாக அறிவித்தால், அது தேசமாக உருவெடுக்கும். சமயம், கலாசாரம், மதம், இனம், தேசிய குழுக்கள், காலங்கள் என உலகளாவிய தன்மைகள் கற்பிக்கப்பட்டு இருப்பதை கருத்தில்கொண்டு பார்த்தால், திருக்குறள் தேசிய நூலாகவும், உலகளாவிய நூலாகவும் அறிவிப்பதற்கு சரியானது மட்டுமின்றி, பொருத்தமானதும் ஆகும்’ என்று கூறியுள்ளார்.