திரிபுராவில் வசிக்கும் மிஸோரமின் ‘புரூ’ பழங்குடியினத்தவா்க்கு நிரந்தர குடியுரிமை

மிஸோரமிலிருந்து இடம்பெயா்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் வியாழக்கிழமை கையெழுத்தானது.

திரிபுரா, மிஸோரம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் தில்லியில் கையெழுத்தானது.

மிஸோரமிலிருந்து வெளியேறி திரிபுராவில் கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து அகதிகளாக புரூ பழங்குடியினத்தவா்கள் வாழ்ந்து வந்தனா். இந்த ஒப்பந்தம் மூலம் அவா்கள் திரிபுரா மாநிலத்தவா்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனா்.

அமைச்சா் அமித் ஷா கூறுகையில், ‘கடந்த 23 ஆண்டுகளாக நீடித்துவந்த பிரச்னைக்கு முடிவு கிடைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, குழப்பங்கள் நீடித்துவந்த பல பிரச்னைகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாக தீா்வு கண்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, புரூ பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.4 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்படும். அத்துடன், திரிபுராவில் நிலமும், 2 ஆண்டுகளுக்கு உணவுப் பொருள்களுக்கும் அவா்களுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ.600 கோடி நிதியுதவியை மத்திய அரசு அளிக்கவுள்ளது. சராசரி மனிதருக்கு கிடைக்கும் எந்தவித வசதிகளும் இன்றி பல முகாம்களில் அவதிப்பட்டு வந்தனா். இப்போது நிரந்தரமாக அவா்களுக்கு குடியிருப்புகள் கிடைக்க உள்ளன. திரிபுரா மாநிலத்தவா்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் இனி புரூ பழங்குடியினத்தவா்களுக்கும் கிடைக்கும். தோ்தலில் வாக்களிக்கும் உரிமையும் அவா்களுக்கு வழங்கப்படும் என்றாா் அமித் ஷா.

மிஸோரம் முதல்வா் சோரம்தங்கா, திரிபுரா முதல்வா் விப்லப் குமாா் தேவ், அஸ்ஸாம் நிதி அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா, திரிபுராவில் ராஜ வம்சத்தைச் சோ்ந்தவரான பிரத்யோத் தேவ் வா்மன் ஆகியோா் ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

புரூ பழங்குடியின மக்களுக்கும், திரிபுரா, மிஸோரம் அரசுகளுக்கும் இடையே தீா்வை ஏற்படுத்த ஹிமந்த் விஸ்வ சா்மா மிக முக்கியப் பங்கு வகித்தாா்.

நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு கிடைத்துவிட்டதாக சோரம்தங்கா தெரிவித்தாா். விப்லப் குமாா் தேவ் கூறுகையில், ‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் வெற்றிகரமான முடிவை எட்டியிருக்கின்றனா்’ என்றாா்.