திராவிடம் தெளிவோம்

கிறித்துவ ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (கி.பி. 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். பாரதியர்களைப் பிரித்து, பாரதத்தை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் `திராவிட இனம்’ என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.

இந்த கால்டுவெல் என்ற என்ற ஆங்கில கிறித்துவனின் கற்பனையின் உருவாக்கமே திராவிட இனவாதம். இவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? பிரிவினைவாதத்தின் மூலமாக பாரதத்தை அடிமையாக்கி மதமாற்றுவது தான் இவர்களின் நோக்கம்.
என்ன கொடுமை என்னவென்றால், முதலிலும் நம்முடைய பாரதத்தை ஆப்பிரிக்கர் ஆட்சி செய்ததாகவும், பின்னால் வடக்கில் வந்த திராவிடர்கள் அதை கைப்பற்றுவதாகவும், அதன் பின்னர் வட கிழக்கிலிருந்து வந்த ஆரியர்கள் இந்த நாட்டை கைப்பற்றி திராவிடர்களை அடிமையாக்கியதாகவும், ஒரு பொய்யான புரட்டை மக்களிடையே பரப்பச் செய்தனர். இது ஒரு கலாச்சார பயங்கரவாதம் ஆகும்.

திராவிடர் தோற்றத்தைப் பற்றிய சித்தாந்தங்கள்: கீன்ஸ் (Keans), மோரீஸ் (Morries), ஸ்க்லேட்டர் (Sclater), டர்னர் (Turner), ரகோஸின் (Ragozin), கால்ட்வெல் (Caldwell), பெர்ரி (Perry), ஸ்மித் (Smith), ஹார்னல் (Hornell) முதலிய மேனாட்டவர் முதல் நமது கனகசபை வரை “திராவிடருடைய” தோற்ற இடத்தைப் பற்றி பல ஆர்வமூட்டக் கூடிய, வித்தியாசமான கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் ஆதாரமாக, வைத்தனர். அவை சுருக்கமாக இங்கு கொடுக்கப்படுகின்றன:

1. மத்திய- ஆசிய தோற்றம்: உடலமைப்பு மற்றும் மொழியியல் ஆதாரமாக, “திராவிடர்கள்” மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கக் கூடும் என்ற வாதம். கால்டுவெல் “ஸ்கைத்தியர்” மூலமாகத்தான் “திராவிடர்” பிறந்திருக்க / தோன்றியிருக்க வேண்டும் என பிடிவாதமாக வாதித்தார். ஆனால், இவ்வாதம், “ஆரியர்களும்” அங்கிருந்துதான் வந்துள்ளனர் எனப்படுகின்ற கருதுகோள்களையும், சித்தாந்தங்களையும் அவர்கள் மறந்து வாதிப்பது போன்றுள்ளது. இரு கூட்டங்களும் இங்கிருந்துதான் பாரதத்தில் நுழைந்தன என்றால், பிறகு எதற்காக அந்த இரண்டு குழுமங்களும் எல்லா சரித்திர நிகழ்வுகளிலும் மோதிக்கொள்ள வேண்டும் எனத்தெரியவில்லை.

2. மேற்காசிய தோற்றம்: மேற்காசியாவில் பல தொன்மையான நாகரிகங்கள் தோன்றியதால், திராவிடர்களும் அந்த நாகரிகங்களின் கலப்பினால் அல்லது மக்களின் புணர்ச்சியினால் உருவாகியிருக்கவேண்டும் என்ற வாதம்.

3. மத்தியத் தரைகடலிருந்து தோற்றம்: எல்லா நாகரிகங்களும் – எகிப்து மற்றும் மத்தியத்தரைகடல் பகுதியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் எனக் கொண்டு, “திராவிடர்” மத்தியத்தரைகடல் இனம் மற்றும் ஆசிய கூறுகள் கலந்து, ஒரு கலப்பினமாக உருவாகியிருக்க வேண்டும் என்ற வாதம்.

4. வடபாரத மற்றும் ஹிமாலய மலைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் தோன்றியமை: “ஆரியர்களுக்கு” முன்பு, “திராவிடர்” வட-பாரதம் முழுவதும் வடமேற்கு- வடகிழக்கு பகுதிகளில் பரவியிருந்தனர். “ஆரியர்கள்” வந்து அவ்விடங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் தெற்கு நோக்கி செல்ல வேண்டியதாயிற்று. “ஹிமாலய மலைகளுக்கு அப்பாற்பட்ட இடங்களில் தோன்றியமை” என்ற சித்தாந்தத்தின்படி “திராவிடர்”, திபெத்து பகுதியில் தோன்றி பாரதத்தின் வடகிழக்கு திசை வழியாக பாரத நாட்டிற்குள் நுழைந்தனர். இங்கு “ஆரியர்” வடமேற்கு திசை வழியாக வந்த சித்தாந்தத்தை மனதில் வைத்துக் கொண்டு, “திராவிடர்” வடகிழக்கு திசைவழியாக நுழைந்தனர் என்றதை நோக்கத்தக்கது. எனவே இந்த நான்கு சித்தாந்தங்களின் படி, “திராவிடரும்” வெளியிலிருந்து பாரதத்திற்குள் நுழைந்தவர் என்று ஆகின்றனர்.

5. லெமூரியன் அல்லது குமரிக்கண்டம்: “பாரதத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்”, “அந்நியர்” என்ற மேற்கண்ட சித்தாந்தங்களுக்கு மாறாக, “திராவிடர்கள்” கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் தோன்றி, பிறகு, அது மூழ்கியபிறகு, தமிழ்நாட்டிற்கு வந்தனர் என்ற வாதம்.
எத்தனை வாதங்கள் வந்தாலும், எத்தனை சித்தாந்தங்கள் வந்தாலும், ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் சண்டை நடைபெற்றதாக எந்தவித ஆதாரமும் இல்லை. திராவிட − ஆரிய யுத்தங்கள் நடைபெற்றதாக கூறி, நம்மை முட்டாளாக்கி இந்த தேசத்தை பிரிக்க முயல்வது அந்நிய மத சக்திகளின் சூழ்ச்சி ஆகும். சங்க இலக்கியங்களில் `திராவிடம்’ என்ற சொல் தென்படவில்லை என அறிஞர்கள் கூறுகிறார்கள்.

`ஆரிய நாடு’ என்பது எவ்வாறு முழு பாரதத்தை குறிக்கிறதைப் போல் `திராவிட நாடு’ என்பதும் நமது முழு பாரதத்தை தான் குறிக்கிறது. `ஆரியம்’ என்றால் `சான்றோன்’ என்ற பொருள்,`திராவிடம்’ என்றால் `மூன்று பக்கம் கடலால் சூழ்ந்த பகுதி’ என்ற பொருள் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆரிய இனமும், திராவிட இனமும் ஒன்றே என்பது சான்றோர்களின் வேதவாக்கு. ஆரிய நாடு என்பதும் திராவிட நாடு என்பதும், பாரத நாடே ஆகும்.
ஆரியம் என்று சொல்லும், ’திராவிடம்’ என்ற சொல்லும் ஒருபொருள் பன்மொழிகளே. ஆரியன் என்ற சொல் இயற்சொல் (Endonym), திராவிடம் என்ற சொல் திசைச்சொல் (Exonym), அவ்வளவுதான். கி.பி. 8-9ஆம் நூற்றாண்டில், கேரளத்துக் காலடியில் பிறந்த ஆதிசங்கரர் தனது சௌந்தரிய லஹரியின் 75ம் பாடலில், சீர்காழியில் கி.பி.7ம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்த திருஞானசம்பந்தரைத் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டார்.
‘திராவிட’ என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல். இது வடமொழிச்சொல். திரா + விட் = மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி. அதாவது தென்பாரதத்தை குறிக்கும் சொல். தென்பாரதம் என்றால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நிலப்பரப்பு அடங்கும்.
திராவிட வேதம் எனக் குறிப்பிடப்படுவது நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஆகும். வேத கோயில் என்பது ஹிந்துக்களின் கோயிலை மட்டுமே குறிக்கும். ஆனால் இன்று அதை கிறிஸ்துவ கோயிலாக மாற்றத் துடிப்பது கலாச்சார பயங்கரமாகும். மற்ற மதங்களின் புனித நூல்கள் ஒருபோதும் வேதமாகாது. காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி “திராவிட்” என்ற சொல் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்:

“ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுதும் கௌட தேசம்; அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்று இருந்தது. கௌட தேசத்தில் வசித்த கௌடர்களை பிரதேச ரீதியில் மேலும் ஐந்தாகப் பிரித்தார்கள். அப்படியே திராவிடத்தில் வசித்தவர்களையும் ஐந்தாகப் பிரித்திருக்கிறது. இவர்களைப் பஞ்ச கௌடர், பஞ்ச த்ராவிடர் என்பார்கள். தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து சென்ற மக்களுக்கு திராவிட் என்ற சொல் பின்னொட்டாக விளங்குகிறது என்று காஞ்சி சங்கராச்சாரியார் தெளிவு படுத்துகிறார். மேலும் பல நூல்களை கண்டறிந்த மா பண்டிதர் அம்பேத்கர் அவர்கள் ஆரிய திராவிட வேறுபாட்டை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
(தொடர்புக்கு : nanthihanuman@gmail.com)