நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் கலையை அனைவருக்கும் பறைசாற்றும் சம்ஸ்கார் பாரதி பற்றி அறிவோம்…
சாஹித்ய சங்கீத கலா விஹீன: சாக்ஷாத் பசு: புசாசவிஷாணஹீன:
த்ருணம் ந காதன்னபி ஜீவமான: தத் பஷூனான் பரமம் பாக தேயம்
இலக்கியம், இசை, கலை இவை எதுவும் இல்லாத மனிதன் கொம்பும், வாலும் இல்லாத விலங்கைப் போன்றவன். அத்தகைய மனிதர்கள் புல்லை சாப்பிடாமல் இருப்பது விலங்குகளின் பேறு! இந்த சுபாஷிதத்தில் இருந்து கலையின் பெருமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கலை தான் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. கலை தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. ஆனால், ” நாம் அந்த கலையை முழுமையாக்க வேண்டும்” என்ற நோக்கோடு 1981ல், சம்ஸ்கார் பாரதி இயக்கமானது ஆக்ராவில் தொடங்கப்பட்டது. பிரபல தொல்லியல் அறிஞரான ஸ்ரீதர் வாக்கென்கர் ஜி, நானாஜி தேஷ்முக் மற்றும் யோகேந்திராஜி ஆகியோர் வழிகாட்டுதலோடு இயக்கம் பீடு நடை போட ஆரம்பித்தது. தமிழகத்தில் காலஞ்சென்ற சுப்பாராவ்ஜி சம்ஸ்கார் பாரதியின் முதல் கார்யகர்த்தராக பணியை ஆரம்பித்தார்.
1988ல், நாக்பூரில் “சாதனை கலைஞர்களின் சங்கமம்” ஒன்று நடைபெற்றது. அதில் தமிழகத்தில் இருந்து சுமார் 25 பேர் கலந்து கொண்டோம். படப்பை ஓவிய நகரில் இருந்து கலந்து கொண்ட ராமசாமி ஐயா அவர்களின் இராமாயண ஓவியக் கண்காட்சி அதில் இடம் பெற்றது. இதனை பார்த்தவர்கள் பாராட்டியதோடு ஒரு சந்தேகத்தையும் கேட்டனர், “இவ்வளவு ராம பக்தி இருக்கின்ற தமிழகத்தில் எப்படி ராமர் சிலையை உடைக்க விட்டீர்கள்?
![]()
“2000 ஆம் ஆண்டில், தமிழக சம்ஸ்கார் பாரதி புதிய மாநில குழுவோடு திறம்பட செயல்பட ஆரம்பித்தது. அன்று பிரபல வழக்கறிஞராய் இருந்தவரும், பின்பு பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதி அரசராய் இருந்தவருமான, ஸ்ரீ. கே. கண்ணன் அவர்கள் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இருந்தார். திருவாளர்கள் ரகுபதி ஜி, லஷ்மி நாராயணன் ஜி, இல. கிருஷ்ணமூர்த்தி ஜி, தண்டபாணிஜி, நடராஜன் ஜி ஆகியோர் அடங்கிய குழு திறம்பட பணியாற்றி பல நிகழ்ச்சிகளை நடத்தியது. அப்போது சம்ஸ்கார் பாரதியின் ஸ்தாபகர்களில் ஒருவராய் இருந்த யோகேந்திராஜியின் ‘அமிர்த மகா உற்சவம்’ சிறப்பாக சென்னையில் நடந்தது. அதில் பத்மவிபூஷன் குமாரி பத்மா சுப்பிரமணியம், செம்மங்குடி சீனிவாச அய்யர் போன்ற கலை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
![]()
குமரி மாவட்டத்தில் இருந்த அனைத்து வில்லிசை கலைஞர்களும் நம்மோடு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நமக்கென்று அங்கீகாரம் கிடைத்தது. குமரி மாவட்ட கலைஞர்களுக்கு கெளரவமும் பெருமையும் கூடியது. மதமாற்றத் தடைச் சட்டம் வந்த பொழுது சாத்தான்குளம் இடைத்தேர்தலும் வந்தது. அன்றைய காலகட்டத்தில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு அவருக்கு ஆதரவளித்து கைலாசன் அவர்கள் தன்னுடைய கலைக்குழுவோடு பிரயாணம் செய்து மதம் மாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவு வேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் சிங் அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து சம்ஸ்கார் பாரதியில் பணியாற்றி வந்தார். அவரோடு கலைமாமணி குமாரராமன் அவர்கள் கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் பொறுப்பெடுத்து இயக்கப் பணியாற்றினார். அதுவரை இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி வந்த குமார ராமன் குழுவினர், அதன்பின் சம்ஸ்கார் பாரதியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். திருச்சியில் கலைமாமணி ரேவதி முத்துசாமி அவர்கள் வழிகாட்டுதலில் அன்று முதல் இன்று வரை சம்ஸ்கார் பாரதி கலைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறது.
சம்ஸ்கார் பாரதி இயக்கமானது வெகுஜன இயக்கம் அல்ல! இது அறிவு சார்ந்த இலக்கியவாதிகள் மற்றும் கலைஞர்களுக்கான இயக்கம்! கலை என்பது நம்மை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கு அல்ல! அது பலரை சிரிக்க வைக்கும். சிலரை சிந்திக்க வைக்கும். சில நேரம் வியக்க வைக்கும். சில நேரம் புரட்சி வெடிக்க வைக்கும். ஆட்சி மாற்றத்தையோ அதிகார மாற்றத்தையோ விரும்பும் மக்கள் முதலில் கையில் எடுப்பது கலை தான்! சங்கம் என்ற ஆலமரத்தின் விழுதாய் இருக்கும் சம்ஸ்கார் பாரதி என்றுமே ஆட்சியை பற்றியோ, அதிகாரத்தை பற்றியோ யோசித்ததும் இல்லை, கவலைப்பட்டதும் இல்லை. இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் குணமாற்றத்தையே விரும்புகிறது. மனித நிலையில் இருந்து அவனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதையே விரும்புகிறது. “கலைவழி இறைநிலை” என்பது இதன் இலக்கு! குறிக்கோள்! இதை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறது.
குடும்ப உறவினர்கள் இடையே உறவை பலப்படுத்தும் பல்வேறு வழிமுறைகள் இருந்தன. தமிழகத்தில் பொங்கல் வாழ்த்து அட்டை என்பதும் ஒரு சிறந்த கருவியாக இருந்தது. காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது, மறைய ஆரம்பித்தது.
சம்ஸ்கார் பாரதி பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை ஓவியப்போட்டி ஒன்று நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 10,000க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அன்றைய அகில பாரத தலைவர் பத்மஸ்ரீ ராஜ்தத் அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இயக்கத்தை வளர்த்தெடுக்க விரும்பினார். ஆகவே அவருடைய சுற்றுப்பயணத்தின் போது அந்த ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
2010ல், கும்பகோணம் மூத்த ஸ்வயம்சேவக் உமாபதி ஆச்சாரி அவர்கள் நடத்தி வரும் குருகுலத்தில், தொல்லியல் துறை அறிஞர்களின் அகில பாரத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இங்கே வந்த பிறகுதான் தெற்காசிய நாடுகளில் சோழர்களின் ஆட்சி நேரத்தில் நமது பண்பாடு எப்படி வளர்ந்தது என்பதை உணர்ந்தனர். தமிழகத்தின் கோபுரங்களையும், கோயில்களையும் கண்டு வியப்படைந்த அந்த வடபாரத தொல்லியல் அறிஞர்கள், தமிழகத்தின் கலை தொன்மையை நினைத்து வியந்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ப.ரா.கிருஷ்ணமூர்த்தியை பாராட்டினர். தமிழகத்தில் சம்ஸ்கார் பாரதியின் வளர்ச்சியால் பெருமை கொண்ட அகில பாரத அதிகாரிகள் ஏழு வருடத்தில் இரண்டு முறை அகில பாரத பொதுக்குழுவை தமிழகத்தில் நடத்தினர். 2011ல் சென்னையிலும், 2017ல் ஊட்டியிலும் நடைபெற்ற கூட்டம் தமிழக கார்யகர்த்தர்களின் உழைப்பை பாராட்டினர்.

தலைநிமிர்ந்த தமிழகத்தை பார்த்து சில அரசியல்வாதிகள், “ஏ தாழ்ந்த தமிழகமே!” என்று அழைத்து, தங்கள் அடுக்குப் பேச்சாலும், மிடுக்கு நடிப்பாலும் ஏமாற்றி வந்தனர். சினிமா துறையை அவர்கள் கையில் எடுத்து, அதன் மூலம் இளைஞர்களை மட்டும் இல்லாமல் சிறுவர், சிறுமிகளை கூட பண்பாட்டால் தரம் இழக்க வைத்தனர். வான்கோழி, போலீஸ்காரன் மகள் என்ற புதினங்கள், கம்பரசம், இராவண காவியம் போன்ற விமர்சனப் படைப்புகள் எல்லாம் தங்களுடைய கோரப்பற்களை திரை உலகில் மெதுவாக நுழைக்க ஆரம்பித்தன. திரை உலகில் காதலும், காமமும் மட்டுமே கதையின் கருவாக இருந்தன. இடதுசாரிகள் இதற்கு ஆதரவாக பக்க பலமாக இருந்தனர். இப்பொழுது அவர்களின் ஆதிக்க சக்தி சரியத் தொடங்கி விட்டது. சம்ஸ்கார் பாரதி கார்யகர்த்தர்களின் விமர்சனத்தால் உரிமை என்ற பெயரில் கண்டதை எழுதியும், நடித்தும், பேசியும், பாடியும் வந்த நிலை இப்போது மாற துவங்கி விட்டது. நம்மவர்களின் அங்குசம் தகாததை தடை செய்து வருவதை உணர்ந்த அந்த கருப்பு சிகப்பு கூட்டத்தினர் “கலை உலகம் காவி மயமாகிறது’ என்று கதறத் தொடங்கி விட்டது, சம்ஸ்கார் பாரதிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
சம்ஸ்கார் பாரதியை பொறுத்தவரை வருடத்திற்கு ஆறு விழாக்களை நடத்த விரும்புகிறது. அகில பாரத அளவில் பரதமுனி ஜெயந்தி மற்றும் நடராஜர் பூஜை ஆகிய இரு விழாக்களையும், தமிழக அளவில் சங்கரதாஸ் சுவாமிகள் ஜெயந்தி மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தநாள் விழா, மாவட்ட அளவில் மாவட்ட குழு விரும்பிய இரு விழாக்களை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்துள்ளது. மாவட்ட அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் வலம்புரி ஜான், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரசிகமணி டி.கே.சி., திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்ற தமிழக எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், நடிகர்களையும், நடனமணிகளையும், ஓவியர்களையும், சிற்பிகளையும் கௌரவித்து வருகிறது.
− இருளப்பன், தமிழகப் பொதுச் செயலாளர், சம்ஸ்கார் பாரதி