‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

நடப்பாண்டில் 1,000 கோடி ரூபாயில், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். 15 ஆயிரம் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள், 300 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்

பொது நுாலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 213 கோடி ரூபாயில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 45 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை, ‘தொழில் 4.0’ தரத்திற்கு உயர்த்த, 3,014 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழில் படிப்பு மாணவர்களுக்காக, 511 கோடி ரூபாய் செலவிடப்படும் கோவையில் கருணாநிதி பெயரில் மாபெரும் நுாலகம் அமைக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 100 பொறியியல், கலை அறிவியல் கல்லுாரிகளில், 200 கோடி ரூபாயில், புதிய திறன் பயிற்சி கட்டமைப்புகள் உருவாக்கப்படும்

மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில், தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் தங்குமிடம், உணவு வசதியுடன் ஆறு மாத பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

அரசு பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கவும், உயர்கல்வி சேர்க்கையை உயர்த்தவும், ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1,000 ரூபாய் நேரடியாகச் செலுத்தப்படும். மூன்று லட்சம் மாணவர்கள் பயனடையும் இத்திட்டத்திற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு, 2,500 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு வங்கிகள் வாயிலாக கல்விக் கடன் வழங்கிடுவதை, அரசு உறுதி செய்யும்.