தமிழ்க்குடி தாங்கிய தகைமையாளர்கள்

பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

மகிபாலன்பட்டியில் பிறந்த கதிரேசன் செட்டியாரை பாண்டித்துரைத் தேவர் மதுரை தமிழ்ச்சங்கப் புலவராகச் சேர்த்தார். அண்ணாமலை அரசர் இவரை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பாடம் சொல்ல அழைத்து கௌரவித்தார். இவரது புலமையால் தமிழறிஞர்கள் பெரும்பயன் அடைந்தார்கள். ஆனால் 1944 ஏப்ரல் 28 அன்று சென்னை கோகலே ஹாலில் கம்பர் கழக முதலாண்டு விழா இவர் தலைமையில் நடைபெற்றபோது சுயமரியாதைக்காரர்கள் என்ற பெயரில் சிலர் புகுந்து குழப்பம் விளைவித்ததில்  நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று.

கம்பன் அடிப்பொடி சா. கணேசன்

விடுதலை போராட்ட கூட்டம் 1938ல் ஏற்பாடாகி இருந்தது. அதில், பங்கேற்க தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் சுப்பராயன், பாரிஸ்டர் ஜோசப், என்.கிருஷ்ணமூர்த்தி போன்ற தலைவர்களுடன் சென்ற சா.கணேசனை போலீசார் தடுத்து நிறுத்தினர். மீறி சென்றால் சுட்டுவிடுவதாக மிரட்டினர். அப்போது, தன் சட்டையை கிழித்து நெஞ்சை திறந்து காட்டி ‘சுடுங்கள்’ என்று வீறு கொண்டு எழுந்தார். அது முதல் தன் வாழ்நாள் இறுதிவரை அவர் சட்டை அணிவதையே நிறுத்தி விட்டார்.  கம்பன் விழா நடத்தி தமிழகத்தில் இலக்கிய வாயிலாக ராமபக்திக்கு ஊட்டமளித்தார்.

ரசிகமணி’ டி.கே.சிதம்பரநாத முதலியார்

காந்தியடிகள் ஒருமுறை சென்னை வந்தபோது ராஜாஜி இவரை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். கம்பராமாயணத்தின் சில பாடல்களை ராகத்துடன் இவர் பாடக் கேட்ட காந்தியடிகள் இந்தக் காவியத்தை அதன் மூலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றதும் இவரோ “அதற்கு நீங்கள் தமிழனாகப் பிறக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். இசைக்கச்சேரிகளில் தமிழ்ப்பாடல்கள் இசைக்கப்பட வேண்டியது குறித்து இவர் எழுதிய கட்டுரைகளைப் படித்த செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், 1941-ல் தேவகோட்டையில் நடைபெற்ற இசை மாநாட்டில் இவரது சிறப்புரையை கேட்டு, தமிழ் இசையை பரப்பும் பணியைத் தொடர ரூ.30,000 நிதி கொடுப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து சென்னையில் தமிழிசை மன்றம் தொடங்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தண்டபாணி தேசிகர் உள்ளிட்டோர் டி.கே.சி. தலைமையில் தமிழிசை மன்றம் நடத்திய இசை மாநாட்டில் தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்

யாழ்ப்பாணத்தில் நிறைய சைவக் குடும்பங்கள் வசித்து வந்தன. ஒவ்வொரு சைவக் குடும்பமும் அப்போது இலங்கையை ஆண்ட பரங்கியர்களுக்கு (டச்சு) உணவாக ஒரு பசுமாடு அனுப்பவேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்பட்டன. வெள்ளையனின் மதவெறியிலிருந்து தப்பிக்க ஞானப்பிரகாசர் என்ற சைவப் பெருமகனார் பாரதம் (தமிழகம்) வந்தார்; சிதம்பரத்தில் வசித்தார்; சமஸ்கிருதத்திலும் தமிழிலும் பல அரிய நூல்கள்  இயற்றினார்; ‘சிவஞான சித்தியார்’ அவற்றில் குறிப்பிடத்தக்க நூல். ஞானப்பிரகாசரின் வம்சத்தில் தோன்றிய ஆறுமுக நாவலர் சைவக் குடும்பங்கள் மதமாற்றத்திற்கு இரையாகாமல் தடுக்க 32 ஆண்டுக்காலம் தெளிவான சமய பிரசுரங்கள் வெளியிட்டார்; அதற்காக சென்னையில் ஒரு அச்சகமும் நடத்தினார். திருவிளையாடல் புராணம், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றை உரைநடையில் எழுதி வெளியிட்டு சமயப்பணி புரிந்தார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்

சங்க கால இலக்கியம் என்ற பொக்கிஷத்தை தேடிக் கண்டுபிடித்து தமிழுக்கு சமர்ப்பணம் செய்தவர் இந்த பள்ளி ஆசிரியர். ஏழ்மையில் வாடினார். ஆனால் தமிழுக்கு அரிய செல்வம் சேர்த்தார். தனக்கு சேதுபதி அரசர் அளித்த பொன்னாடையை விற்று ‘சிலப்பதிகாரம்’ பதிப்பிக்க தான் பட்டிருந்த கடனை அடைத்தார். உயர் பதவிகள் தேடி வந்தன. தமிழ்ப் பணி தடைபடுமே என்று அவற்றை ஏற்க மறுத்த சமர்ப்பண உணர்வை தமிழ்த் தாத்தா உ.வே.சா வடிவில் தமிழகம் தரிசித்தது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி என்று போற்றப்பட்ட இந்த கன்யாகுமரிக் கவிஞர்  நீதித்துறை அலுவலராகப் பணிபுரிந்தவர். அவர் காலத்தில் கேரளத்தின் சில பகுதிகளில் ஒருவரின் சொத்து அவர் பிள்ளைகளுக்கு சேராமல் அவரது சகோதரி பிள்ளைகளுக்கே சேரும் என்ற ‘மருமக்கள் வழி’ சட்டமாக இருந்தது. கவிமணி, பத்திரிகை ஒன்றில் ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற தொடர் எழுதினார். ‘மருமக்கள் வழி’யால் குடும்பங்களில் வீசிய புயல் பற்றி விவரித்தார். ஆனால் நூல் முழுதும் தனக்கு ஆதிகாலத்து சுவடியிலிருந்து கிடைத்தது என்று பொய்யாக அறிவிப்பும் வெளியிட்டார். அது ஊரில் விவாதத்தை எழுப்பி ஓரளவுக்கு பழைய சட்டத்தையே மாற்றச்செய்து விட்டது! இலக்கியத்தை ஊர் நன்மைக்கு உதவிடச் செய்த கவிமணியின் அரும்பணி ஈடு இணையற்றது.

நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார்tamil-kudi

நீதித் துறையில் பணியாற்றியவர்; ‘நாடகத் தந்தை’ என்று போற்றப்படுபவர். முதுமையில் ‘குடீசகம்’ என்ற வகை துறவறம் ஏற்றார்; கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும் நாடகங்களை சொல்லி பேத்தியை எழுதச் செய்து தமிழ்ப் பணி ஆற்றினார். மயிலை கபாலீஸ்வரர் கோயில் தர்மகர்த்தாவாக இருந்தபோது வெள்ளையனான கவர்னர், தான் வரும்போது கோயில் நடை திறக்க வேண்டும் என்றான்; மறுத்த சம்பந்த முதலியார் கோயில் நடை திறப்பது ஆகம விதிப்படிதான் நடக்கும் என்று அஞ்சாமல் திட்டவட்டமாக அறிவித்து கவர்னரைத் திருப்பி அனுப்பினார். எளிமையும் கண்ணியமும் இவரது நாடக வசனங்களின் சிறப்பு.

சுவாமி சகஜானந்தர்

ஆரணியை அடுத்த புதுப்பாக்கத்தில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் முனுசாமி. திண்டிவனம் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் படிக்கும்போது, சிகாமணி என்று இவர் பெயரை மாற்றினார் பாதிரி. இவரை கிறிஸ்தவராக மதம் மாற்ற அந்தப் பாதிரி முயன்றபோது, பள்ளியை விட்டே வெளியேறினார். ஆனால் அவருக்கு ஆன உணவுச் செலவு வகையில் பணத்தை கட்டாயப்படுத்தி அந்த பள்ளி இவரிடமிருந்து வசூலித்தது. பின்னாளில் துறவு பூண்டு சுவாமி சகஜானந்தர் ஆனார். சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டார். சிங்கப்பூர் சென்று சைவ சித்தாந்தம் பரப்பினார். தமிழக மேலவையிலும் சட்டப்பேரவையிலும் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்கிறார். தலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர் தலித் குழந்தைகளுக்காக நடத்திய பள்ளிக்கூடத்தில் ஹிந்தியும் சமஸ்கிருதமும் கற்பித்தார். பல மொழிகள் கற்பது தலித்துகளின் விடுதலைக்கு கைகொடுக்கும் என்று இவர் கருதினார்.