தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,331 கோடி நிதி: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

 தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே துறைக்கு 15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது, மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டது. தற்போது, ஒரு நாளைக்கு 15 கி.மீ. வரை ரயில் தண்டவாளம் அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5,200 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,500 கி.மீ. நீளத்துக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே தற்போது பெரிய அளவில் உருமாற்றம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 2009-14-ம் ஆண்டில் ரூ.879 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இன்றைய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2009-14-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7 மடங்கு உயர்வாகும்.

தமிழக ரயில்வேயில் மின்மயமாக்கல் பணி 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதுபோல, கேரளத்தில்100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது.

‘அம்ரித் நிலையம்’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களில் 213 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளம், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் வகையில், 2,100 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாளம் மேம்படுத்தப்படும். அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் விடப்பட்டுள்ளன. மேலும், அதிக வந்தே பாரத் ரயில்கள் வரும் ஆண்டுகளில் இயக்கப்பட உள்ளன. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் ஆகியவை சில மாதங்களில் வர உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

4-வது ரயில் முனையம்: பின்னர் சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் 4-வது ரயில் முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை உருவாக்க ஆய்வு மேற்கொண்டு இருக்கிறோம். 4 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் புதிய பாதை, அகலப் பாதை, இரட்டை பாதை உள்பட பல்வேறு பணிகளுக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.