தமிழக பட்ஜெட்

அடுத்த 8 மாதங்களுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இந்த பட்ஜெட்டை போடவா 100 நாட்கள் தேவைப்பட்டன, நடுவில் அவசர கதியில் ஒரு வெள்ளை அறிக்கை வேறு, அதுவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யாமல் நேரடியாக ஊடகங்களில்!? என சிந்திக்க வைத்துள்ளது இந்த பட்ஜெட்.

மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு, தொழில் நிதி உதவி திட்டத்தின் கீழ் 7,000 சிறுபான்மையினர் பயன் பெற நடவடிக்கை, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்தி, அச்சமூகத்திற்கு சொந்தமான வக்பு சொத்துக்களை அரசு பாதுகாக்க முடியும் என தங்களது சிறுபான்மையினர் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது தி.மு.க அரசு.

பட்ஜெட்டில் ஹிந்து கோவில்களுக்கும் சில அறிவிப்புகள் உள்ளது. அதாவது, போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூ. 130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும். 100  திருக்கோவில்களில் ரூ. 100 கோடியில் தேர், குளம் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மையினருக்கு செலவழிக்கப்படுவது அரசு நிதி. ஹிந்து கோவில்களுக்கோ பக்தர்கள் அளிக்கும் நிதி ஹிந்து அறநிலையத்துறையின் வாயிலாக செலவழிக்கப்படும் என்பதுதான் வித்தியாசம். திருக்கோவில்களில் நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு, கோவில் நிர்வாகத்தில் தி.மு.கவினரை உள்ளே நுழைக்கும் முயற்சி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பெட்ரோல் டீசலுக்கு ரூ. 5 குறைக்கப்படும் என கூறிய தி.மு.க அரசு, இந்த பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு மட்டும் ரூ. 3 குறைத்துள்ளது. மீதி 2 ரூபாய் எப்போது குறைப்பீர்கள், டீசலுக்கு எப்போது ரூ. 5 குறைக்கப்படும் என காத்திருக்கின்றனர் மக்கள். வரி விதிப்பிற்கு குழு அமைக்கப்படும் என்பது, அனைத்து வரிகளும் விரைவில் தாறுமாறாக உயரும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு, சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடிக்கு முன்னுரிமை என்ற அரைகுறை அறிவிப்புகள் மழுப்பலாகவே தெரிகிறது. சிங்காரச் சென்னை 2.0 தொடங்கப்படும் என்பது போன்ற பல முன்னரே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ஏதோ புதியதாக அறிவிப்பதைபோல மீண்டும் பட்ஜெட் உரையில் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இந்தாண்டும் இல்லை.

சென்னை – குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின்  பட்ஜெட் அறிவிப்பு, மத்திய அரசின் சேலம் 8 வழி சாலையை முடக்க தி.மு.க நடத்திய நாடகங்களை நினைவூட்டின. மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் இவர்கள் எப்படி 8 வழி சாலையை அமைப்பார்கள், அப்போது மக்கள் போராட மாட்டார்களா அல்லது இத்திட்டம் அறிவிப்பாக மட்டுமே இருக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

இடைநிலை அறிக்கையில் கல்வித்துறைக்காக ரூ. 35,104 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது அது தற்போது ரூ. 32,599 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி, உயர்கல்விச் சலுகை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

‘பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம்’ என திரும்ப திரும்ப சொல்லிவருகிறார் நிதியமைச்சர். ஆனால், 100 ரூபாயில் மாநில அரசின் பங்கு என்ன, மத்திய அரசின் வரிகள் எவ்வளவு, அதில் எத்தனை சதவீதம் மாநில அரசின் மேம்பாட்டுத் திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு மீண்டும் திரும்ப தரப்படுகிறது என்ற உண்மையை மட்டும் சொல்ல மறுக்கிறார்.

மத்திய அரசின் ஜல் ஜீவன், ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டம், ஸ்வச் பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை ஏதோ தி.மு.க அரசின் திட்டங்கள் போன்றதொரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார் நிதியமைச்சர். இது மத்திய அரசின் திட்டத்திற்கு தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளும் தி.மு.கவின் வழக்கமான முயற்சியே என்று இணையதளவாசிகளால் கருதப்படுகிறது. பட்ஜெட் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான மீம்ஸ்கள் இது குறித்து வெளியாக துவங்கிவிட்டன.

இப்படியாக ஒருவழியாக தனது முதல் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். தமிழ் கூறும் நல்லுலகில், தமிழை வளர்ப்பதாகக் கூறியே வளர்ந்தது தி.மு.க. ஆனால் அதன் அமெரிக்க ரிடர்ன் நிதியமைச்சரின் தமிழ்தான் அவர் போட்ட பட்ஜெட்டைவிட மிக மோசமாக உள்ளது.

உதாரணமாக, வரிவிதிப்பு, விரி விதிப்பு என மாறிவிட்டது. அகழாய்வு என்பது அலகாய்வு என்ற புதிய பெயரை பெற்றுள்ளது. தயார் நிலை என்பது தாயார் நிலையாகிவிட்டது. ஆழ்கடல் அலகடல் என பெயர் மாற்றம் பெற்றுவிட்டது. நில நிர்வாக ஆணையாளர் சில நிர்வாக ஆணையாளர் ஆகிவிட்டார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நிதி ஒதுக்கீடு குறித்த பல விவரங்கள் அவரது உச்சரிப்பால் நமக்கு புரியவே இல்லை. 2 ஆயிரத்தி 2 லட்சத்தி… என கூறினால் யாருக்குதான் புரியும்? தமிழை ஆங்கிலத்தில் எழுதி படிக்கிறாரோ என்ற சந்தேகம் வந்ததை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

மதிமுகன்