ததீசி தேக தான சமிதி மாநாடு

விருத்தாசுரன் என்ற அசுரனை அழிக்க தனது முதுகெலும்பையே இந்திரனுக்கு தானமக தந்தவர். உலகில் முதன்முதலில் தேகதானம் செய்தவர் ததீசி முனிவர். இவரது செயலில் இருந்து உத்வேகம் பெற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் “ததீசி தேக தான சமிதி”. இது 1997ம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து செயல்பட்டு வருகிறது, தேக உறுப்புகள், திசு, கண் மற்றும் ஸ்டெம் செல் தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு, தனது 25 ஆண்டுகால மகத்தான பணியினை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, உடல், உறுப்பு, கண் தானம் குறித்த விழிப்புணர்வை தேசத்தில் பரப்பும் நோக்கில் நாடு தழுவிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளது. 21 மாநிலங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் இதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள மாளவியா பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ததீசி அமைப்பினர் இந்த தகவலை தெரிவித்தனர். மேலும், “செப்டம்பர் 3 அன்று டெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மாநாட்டு மையத்தில் ஒரு நாள் மாநாடும் செப்டம்பர் 4 அன்று டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஒரு சம்மேளனமும் நடைபெறும். பாரத துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் இந்த சம்மேளனத்தில் பேச அழைக்கப்பட்டுள்ளார். ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதன் மடத்தை சேர்ந்த பூஜ்ய சுவாமி சிதானந்த சரஸ்வதியும் இந்த சம்மேளனத்தில் பேச ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்களான டாக்டர். மன்சுக் மாண்டவியா, மீனாட்சி லேகி, பாரதி பிரவீன் பன்வார், முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோரும் இதில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர். மோகன் ஃபவுண்டேஷன், ஆர்கன் இந்தியா, ஐ.எம்.ஏ, நோட்டோ, ஒர்போ, தேசிய கண் வங்கி, அம்மா கண், உறுப்பு, உடல் தான விழிப்புணர்வு அமைப்பு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதில் பங்கு கொள்கின்றன” என ததீசி தேக தான சமிதி அமைப்பினர் தெரிவித்தனர்.