தடைகளும் தடை மறுப்புகளும்

மாதொருபாகன் புத்தகத்தை தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான குரல்கள் உற்சாகமாய் இத்தீர்ப்பை வரவேற்று முழங்கி வருகின்றன. ஆனால், இதில் பலருக்கும் தெரியாத உண்மை இந்தியாவில் சுதந்திர காலம் தொட்டு இன்றுவரை நாடு முழுதுமோ, அல்லது குறிப்பிட்ட மாநிலங்களிலோ, முழுவதும் தடை செய்யப்பட்டோ, தடைசெய்து பின்னர் தடை நீக்கப்பட்டோ, தடை கோரி வழக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டோ உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 130க்கு மேல். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவை பற்றி தான் இந்த இதழ் விஜயபாரதம் நம்மோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறது.

து ஒருபக்கம் இருக்கட்டும், இது விஷயமாக வேறு சில சுவாரஸ்யமான விசயங்களையும் நாம் தெரிந்து கொள்வோம்.

இது நடந்தது 1909ம் ஆண்டு. புத்தகத்தை தடை செய்தவர் இந்தியாவில் ஆட்சியில் இருந்த பிரிட்டிஷார். புத்தகம் அச்சாகி வெளிவந்து, படித்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு   புத்தகம் தடை செய்யப்படுவது என்பதே வாடிக்கை. ஆனால் இந்தப் புத்தகம் அச்சுக்குப் போகும் முன்னரே தடை செய்யப்பட்டது. காரணம் ரஷ்யப் புரட்சியையும், பிரஞ்சுப் புரட்சியையும் உந்துதலாய் கொண்டு, பிரிட்டிஷாருக்கு  எதிராக இந்தியர் அனைவரும் மதவேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து போராட வேண்டும் எந்த நோக்கத்தில் எழுதப்பட்டது அந்தப் புத்தகம்.  ஆங்கிலேயர்களால் வெறும் சிப்பாய் கலகம் என்று வர்ணிக்கப்பட்ட 1857 ஆண்டின் உண்மையில் எப்படி ஒரு ஒருங்கிணைந்த இந்திய சுதந்திரப் போராட்டம் என்று உலக்கிற்கு உணர்த்திய நூல் அது. வரலாற்றை உள்ளது உள்ளபடி சொன்ன புத்தகம். புத்தகத்தின் பெயர் ‘தி வார் ஆஃப் இந்தியன் இன்டிபென்டன்ஸ்’. (இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு -1857) எழுதியவர் சுதந்திர வீர சாவர்க்கர்.karuthu-suthandhiram

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் உள்ள நாடுகளில் மட்டும் அப்புத்தகத்தை தடை செய்யவில்லை. பிரான்சு நாட்டையும் வலியுறுத்தி தடை செய்ய வைத்தனர். காரணம், இந்தியாவின் சில பகுதிகளில் பிரான்சு நாடு ஆட்சி செய்து வந்தது. இந்திய விடுதலை வீரர் பலர், பிரான்ஸ் நாட்டில் தங்கி இங்கிலாந்துக்கு எதிராக உரிமைக் குரல் கொடுத்து வந்தனர். இறுதியில் ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவி, 1909ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் அப்புத்தகம் அச்சாகி, அன்றைய காலகட்டத்தில் மிகப் பிரபலமான பெயர் கொண்ட ஆங்கிலப் புத்தகமான ‘பிக்விக் பேப்பர்ஸ்’ என்ற புத்தகத்தின் அட்டை சாற்றப்பட்டு, பல்வேறு கப்பல்கள் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டு, ரகசியமாக விநியோகிக்கப்பட்டது. அந்தப் புத்தகம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது. இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் அந்தப் புத்தகத்தின் மீதான தடை நீக்கப்பட்டது. சாவர்க்கர் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த அச்சம் அப்படி.

ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸை ஒழித்துக் கட்டுவதில் ஒத்துழைத்த நேரு, ஆங்கிலேயருக்கு சாவர்க்கரை ஒழித்துக் கட்டும் வேலையையும் நன்கு செய்தார். காங்கிரசும் வெளிப்படைத்தன்மையும் அப்படி ஓர் உறவு கொண்டவை.

உலகெங்கும் பண்முகத்தன்மைக்கு எதிராகவும், தங்கள் மதத்தை சாராத மற்றவர் மீது போர் தொடுத்து கொலை செய்யத் தூண்டுவதுமாய், எதிராகவும் உள்ளதாக இஸ்லாமியர்களின் வழிகாட்டி நூலாகக் கருதப்படும் ‘குர்ஆன்’ தடை செய்யப்பட வேண்டும் என்று கல்கத்தா உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். மார்ச் 29, 1985ல் அவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார். அவர் பெயர் சந்தன்மால் சோப்ரா. இந்திய கிரிமினல் சட்டம் 153 அ, 295 அ, ஆகிய பிரிவுகளின் படி நடவடிக்கை கோரிய அவர் குர்ஆன் எப்படி சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என அதில் இருந்து முக்கியமாக 24 ஆயத்துகளை மேற்கோள் காட்டியிருந்தார். 1984 ஜூலையில் மேற்கு வங்க மாநிலம் உள்துறை செயலருக்கு அம்மாநிலத்தில் குரானை தடை செய்யக் கோரி ஹென்.கே. சக்ரவர்த்தி என்பவர் அளித்த புகார் மனுதான் இவரை இவ்வழக்கு தொடுக்க செய்ய காரணமாய் அமைந்தது. நாடெங்கும் அதிர்வலையை கிளப்பிய இவ்வழக்கு, பலவிடங்களில் இஸ்லாமிய ஜிகாதிகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தவும் காரணமாயிற்று. மத்திய அரசே நேரடியாக இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு தடைக்கு எதிராக வாதிட வேண்டும் என்று ‘மதசார்பற்ற ஊடகங்கள்’ வலியுறுத்தின. இறுதியில் ஜூன் 18, 1985 ல், குர்ஆன் மீது தடை விதிக்க முடியாது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இருப்பினும் கதை இதோடு முடிந்து போகவில்லை. ‘தில்லி வாய்ஸ் ஆஃப் இந்தியா’ பதிப்பகத்தின் மூலம் வேற்றுமதங்களின் ஏகத்துவ இறை கொள்கைகள் எப்படி எப்படி எல்லாம் சமூக நல்லிணக்கத்தை இந்தியாவில் கெடுத்து வருகிறது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவந்த சீத்தா ராம் கோயல் என்பர். ‘கல்கத்தா குரான் பெடிஷன்’ எந்த தலைப்பில் வழக்கின் அனைத்து விவரங்களும் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதை தொடர்ந்து அப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சீத்தா ராம் கோயல், சந்தன்மால் சோப்ரா ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தரப்பில் மிகுந்த வலியுறுத்தல் செய்யப்பட்டது. இதன் தொடர்பாக வழக்கு நடந்து, எப்படி குரானை தடை செய்ய முடியாதோ அப்படியே அது பற்றிய விமர்சனங்களையும் தடை செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று முஸ்லிம் இழிவு செய்வதாக வழக்கு தொடுக்கும் பலரும் வசதியாக இந்தத் தீர்ப்பை மறந்துவிட்டனர்.

கிறிஸ்து இயேசுவின் வாழ்க்கையில் மறைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் ரகசியங்களை – அவருக்கும் மகதலேனா மரியாவுக்கும் உள்ள உறவுகளை வெளிப்படுத்ததிய டான் ப்ரவுன் எழுதிய ‘டா வின்ஸி கோட்’ எனும் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுவாக மைனாரிட்டிகளின் உணர்வுகள் பாதிக்கப்படும் என்றால், வேண்டுகோள் வராமலே செயல்பட்டுவிடும் நம் மத்திய அரசு, கிறிஸ்தவ உலகமே ‘டா வின்ஸி கோட்’ ஐ தடை செய்ய முன்வராததால் தடை கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனாலும் இந்திய மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் அப்புத்தகத்திற்கு இன்னமும் தடை உள்ளது.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின்  (இஸ்கான் ) வளர்ச்சியை கண்டு பயந்த கம்யூனிஸ்டு ரஷ்யாவில், கிருஷ்ண பரமாத்மா உபதேசத்தருளிய பகவத் கீதையை தடை செய்ய வேண்டும்  என வழக்கு தொடுக்கப்பட்டது. ரஷ்யாவில் உள்ள டோம்சக் பல்கலைக்கழகத்தின் வாயிலாக எடுக்கப்பட்ட இவ்வழக்கு உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் எதிர்ப்பாலும் இந்திய அரசின் தடைக்கு எதிரான கருத்தாலும் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர்களின் பைபிள் போல எந்த நூலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஊக்குவிக்கவில்லை எனக் கூறி பைபிள் தடை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பைபிளில் பெண்களுக்கு எதிராக எவ்வளவு மட்டமாக வாசகங்கள் உள்ளன, அவர்கள் எப்படி செக்ஸ் அடிமைகளாகப் பார்க்கப்பட்டனர் என்றெல்லாம் பைபிளில் இருந்தே வாசகங்கள் எடுத்தாளப்பட்டிருந்தன. ஆனால் அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

எழுத்துலகை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருக்கும் இடதுசாரிகள், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையும் ஏனைய மதங்கள் ஏகத்துவ இறைகொள்கையே கொண்டிருந்தாலும் அவற்றை ஆதரிப்பதுமாகத்தான் செயல்பட்டுவருகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான விஷயம் என்றால் கருத்துரிமை அதை ஆதரிப்பதும், சிறுபான்மைக்கு எதிரான கருத்துரிமை என்றால் அதை எதிர்ப்பதும் தான் இங்கு வழக்கமாகியுள்ளது. மோடியை ஆதரித்த, ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக பிரபல ஆங்கில பதிப்பகம் தமிழகத்தைச் சேர்ந்த ஞானபீட எழுத்தாளர் ஜோ டி குரூசின் புத்தக ஆங்கில மொழியாக்கத்தை பிரசுரிக்க மறுத்ததை நினைவு கூர்ந்தால் போதும், இங்கு கருத்துரிமை கூட அரசியல் சார்ந்தது என்பதை நிரூபித்துவிடும்.

மாதொருபாகன் புத்தகம் கற்பனையாக இருந்திருக்குமானால் பிரச்சினை ஏதுமில்லலை. ஆனால் உண்மை ஆய்வு என்று கூறி, ஒரு ஊரையும் குறிப்பிட்ட சமுதாயப் பெண்களையும் அது அவமதித்திருப்பதுதான் வேதனை. நீதிமன்றம் எப்படி இவ்வளவு பெரிய அவமதிப்பை கண்டுகொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது புரியாத புதிர்.