தங்க வியாபாரியிடம் லஞ்சம் கேட்டதாக 3 ஜிஎஸ்டி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

சதீஷ் சர்மா மற்றும் அங்கூர் கோட்யான் இருவரும் மத்திய ஜிஎஸ்டி துறையின் கண்காணிப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மற்றொரு அதிகாரியுடன் இணைந்து இவர்கள் தன்னிடம் ரூ.22 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெற்கு மும்பையைச் சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தெற்கு மும்பையில் உள்ள வரி ஏய்ப்பு தடுப்பு அலுவலகத்தில் எங்கள் நிறுவனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தேன். ஆனால், அதன்பிறகும் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அங்கூர் கோட்யான் என்னுடைய மகனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பினார். இதையடுத்து மீண்டும் அவர்களது அலுவலகம் சென்று நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்து விளக்கிக் கூறினேன். அப்போது அங்கூர் கோட்யானும் மற்றும் அகிலேஷ் என்ற மற்றொரு அதிகாரியும் என்னிடம் ரூ.22 லட்சம் லஞ்சம் கேட்டனர்.
மார்ச் 15-ம் தேதி, உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அந்த அதிகாரிகள் எங்கள் அலுவலகம் வந்து சோதனை நடத்தினர். ரூ.22 லட்சம் லஞ்சம் தர வேண்டும் இல்லையென்றால், ரூ.3 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக என் மீது வழக்குப் பதிவு செய்துவிடுவதாக அவர்கள் மிரட்டினர்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ, சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் லஞ்சம் கேட்டது உண்மை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.