டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் வழங்க வேண்டும்: ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு

டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில்பொது சுகாதாரப் பணியாளர்கள்பங்கேற்றனர். அப்போது, செல்வவிநாயகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெங்கு பரிசோதனை முடிவுகளை விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 6 மணி நேரத்தில் டெங்கு பரிசோதனை முடிவுகளை வழங்க அனைத்து அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு பாதிப்பைக் கண்டறிவதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருசிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மூன்று மாதத்துக்கு டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் டெங்கு கட்டுக்குள் உள்ளது.

மழைக்காலம் தொடங்கும் போதே கொசுக்களால் டெங்கு,மலேரியா, சிக்குன் குனியா போன்றநோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 40 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது மருத்துவமனைகளில் 503 பேர் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.