டிசம்பர் – 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – அமைதி காத்த அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், பாபர் மசூதி இடிப்பு நாள், ஹிந்து மற்றும் முஸ்லிம் மத தலைவர்களால், நேற்று ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக அனுசரிக்கப்பட்டது. கடந்த, 1992ல், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதை, முஸ்லிம்கள், ‘துக்க நாள்’ ஆக அனுசரிக்கின்றனர். ஹிந்துக்கள் ‘வெற்றி நாள்’ ஆக கொண்டாடி வந்தனர்.

தீர்ப்பு

அயோத்தி வழக்கில், ‘சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம்’ என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ‘வெற்றி நாள்’ நிகழ்ச்சியை கைவிடுவதாக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு அறிவித்தது.அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ‘துக்க நாளை அமைதியாக அனுசரிப்போம்; அதில் பங்கேற்பது, தனிநபர் விருப்பத்தை பொறுத்தது’ என, தெரிவித்தது.

அதன்படி, நேற்று, ராமஜென்மபூமிக்கு அருகே உள்ள, ‘தெரி பஜார்’ மசூதியில், அமைதியாக தொழுகை நடந்தது. இதில், 150 முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்க நாள்

அயோத்தியில் உள்ள, அனுமன் கோவில் பூசாரி, ராஜு தாஸ், ”பக்தர்கள், வழக்கம் போல வழிபட்டு வருகின்றனர். இந்நாளை, ‘மத நல்லிணக்க நாள்’ ஆக கடைப்பிடிக்கிறோம்,” என்றார்மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க, தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகள், கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் ஆகியவை, வழக்கம் போல செயல்பட்டன. ஒரு சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் படி, 305 பேரை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். அத்துடன், 10 தற்காலிக சிறைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.