ஜெர்மனியில் ‘அகதி’ பிரச்சினை வம்புக்கு வெற்றிலை பாக்கு!

 

ஆண்டு 2005லிருந்து ஜெர்மனியின் அதிபராக விளங்கும் ஏன்செலா டொரோதியா மெர்கல் செப்டம்பர் தேர்தலில் நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டது தான். இருப்பினும் இவர் கட்சியின் வாக்கு  சுமார் 8% குறைந்துள்ளது.  வாக்குப்பதிவு 5.5 சதவீதம் கூடியிருக்கும் வேளையில் இவர் கட்சியினர் வாக்குகள் ஏன் இறங்குமுகமாயிற்று?

மற்ற ஐரோப்பிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சி கண்டு தவித்த நிலையிலும் ஜெர்மனியின் பொருளாதாரம் ஆட்டம் காணாமல் பெருமளவு அரசியல் ஸ்திரத்தன்மையுடன்தான் நாட்டை நடத்திச்சென்று கொண்டிருக்கிறார் மெர்கல்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து கழன்றுபோன பின்னர் ஏற்பட்டுள்ள சலனங்களை இவரை அன்றி வேறு யாரும் இவ்வளவு திறம்பட கையாண்டிருக்க முடியுமா என்று பல அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்கள்.

இவ்வாறு உள்நாட்டில் மட்டுமின்றி உலக அரங்கிலும் நன்மதிப்புடன் உலாவரும் இவருக்கு ஏன் இந்த சரிவு?

உறுதியுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில், கொள்கைகளில் மெர்கல் சமரசம் செய்து கொள்கிறார் என்று ஒரு சாரார் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அயல்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக நேரத்தையும் கவனத்தையும் செலுத்துகிறார் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஜெர்மனிக்கு மாற்றுச் சிந்தனை முறை என்ற தேசிய எண்ணம் கொண்ட Alternative for Germany (AFG) என்ற கட்சி 13% வாக்குகள் பெற்று எல்லா பிரதான கட்சிகளின்  வாக்குகளைப் பிரித்ததே ஆகும். ஆகையால் கூட்டணி அரசுதான் என்பது அரசியல் நிர்ப்பந்தம். இது மெர்கலுக்கு விடப்பட்டிருக்கும் சவால்.

ஜெர்மனி தேர்தல் முடிவுகள் நமக்குத் தரும் பாடங்கள் என்ன?

* அகதிகள் / புலம் பெயர்வோர் விஷயத்தில் உறுதியாகச் செயல்படாமல் மெர்கல் ஜெர்மனிக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டார் (நமக்கு ஏற்கனவே பங்களாதேஷில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் குடியேறியோர் பிரச்சினை போதாதென்று ரோஹிங்கியா முஸ்லிம்களை வேறு வரவேற்க வேண்டுமாம். மனித உரிமை ஆர்வலர்கள் என்று வேறு வேலையில்லாமல் திரிபவர்களின் பேச்சைக் கேட்டு வேலியில் போகிற ஓணானுக்கு வெற்றிலை பாக்கு வைப்பதா?

* ஐரோப்பா முழுவதுமே தேசிய எண்ணம் வலுத்து வருகிறது. உதாரணமாக, டென்மார்க், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து என்று பல முக்கிய நாடுகளிலும் தன் தேச நலனைப் புதைத்துவிட்டு உலக சகோதரத்துவம் என்று மாயையை, கனவை போதித்து வந்த சோஷலிசம் காலாவதியாகிக் கொண்டிருக்கின்றது.

* உலக பொருளாதார, அரசியல் அரங்குகளில் பெருமை புகழ் எல்லாம் தேவைதான். அதே நேரம் உள்நாட்டு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்றுமதி தொழில்நுட்பத்தை முன்னேறிய நாடுகளில் இருந்து பெறுதல், அயல்நாடுகளில் வசிக்கும் பாரதியர்களின்  இடர்களைக் களைதல் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அயலுறவுக் கொள்கை என்பதே அறிவுசார்ந்த சுயநலம் (enlightened self interest) தானே?