ஜூன் 1 முதல்! ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு முறை அமல்…

”மத்திய அரசின், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், ஜூன் 1 முதல், நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ரேஷன் அட்டை வைத்துள்ள, 81 கோடி மக்கள், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்,” என, மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2016 முதல், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, குறைந்தபட்ச விலையாக, கிலோ, 13 ரூபாய்க்கு, ரேஷன் கடைகள் மூலம், மாதம்தோறும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், பணிசூழல் காரணமாக,பல்வேறு மாநிலங்களுக்கு குடிபெயரும் தொழிலாளிகள், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில், ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இதற்கு பல மாநிலங்கள் சம்மதம் தெரிவித்தாலும், அங்குள்ள சலுகைகள் பாதிக்கப்படும் என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இலவச அரிசி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. ஆனால், வெளி மாநிலங்களுக்கு சென்று வாங்கினால், இந்த சலுகை கிடைக்காது எனவும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பொருள் வாங்கினால் இருப்பு பாதிக்கும் எனவும் சில கட்சிகள் கூறி வருகின்றன.

ஆளும் அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துஉள்ளது.இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், 2020, ஜூன் 30க்குள், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு, கடந்த மாதம் அறிவித்தது. இதன் முதல் கட்டமாக, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட, 12 மாநிலங்களில், இத்திட்டம், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது.

மத்திய உணவு மற்றும் பொது வினியோகதுறை அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:’ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம், வரும், ஜூன், 1 முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைகளிலும், மக்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். மொத்தம், 81 கோடி பேர், இத்திட்டம் மூலம் பயன் அடைவர்.இவ்வாறு, அவர் கூறினார்.