ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்

நாட்டுக் காளைப் பாதுகாப்பிலிருந்து நாட்டுப் பசுப்பாதுகாப்பு நோக்கி
எனக்குப் பால் தருவதால் பசுவும் என் தாய்தான். என் தாயைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு வேண்டும்”
தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கலை அடுத்து விம்மிப் பொங்கிய இளைஞர்கள் எழுச்சியின் அங்கமாக திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தென்பட்ட இந்த பதாகை வாசகம், ஜல்லிக்கட்டு ஆதரவு இயக்கம் நடைபோட வேண்டிய பாதையை துல்லியமாக சுட்டிக் காட்டியது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னார்வத்துடன் எழுந்த இளைஞர்களின் எழுச்சி பேரணி தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதது. எந்தவித தலைமையும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் கூடியது என்பது எங்கோ ஓரிடத்தில் உறங்கிக்கடந்த உள்ளுணர்வை தட்டியெழுப்பி இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மத்திய மாநில அரசுகள் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எந்தவித இன்னல்களுக்கும் அவர்களை உட்படுத்தாது கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. எந்தவொரு மாபெரும் பேரணி என்றாலும் அங்கு சமூக விரோதிகள் ஊடுருவுவது இயற்கையான ஒன்று. இங்கும் அது நடந்தது.

உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு தமிழகத்தில் பாஜகவுக்கு 18 சதவீத வாக்குகளை அள்ளித் தரும் என்ற சர்வே பலருக்கு வயிற்றெரிச்சலை கிளப்பியிருக்கிறது. ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு மோடி வந்து சென்றது அவரது செல்வாக்கை கூட்டியிருக்கிறது. இதனாலெல்லாம் பாஜக மீது எரிச்சல் கொண்ட தேச விரோத சக்திகள் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை மோடி எதிர்ப்பு போராட்டமாக தனித்தமிழ்நாட்டு போராட்டமாக; வடக்கு தெற்கு பிரிவினை போராட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கின.

சமூக ஊடகங்களின் வலிமையினால் ஊழக்கு எதிரான போராட்டம் அன்னாஹசாரே தலைமையில் டில்லியில் நடைபெற்றபோது போராட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தேசிய கொடியை கையில் நிமிர்த்திக்கொண்டுதான் கலந்துகொண்டனர். மேடையிலிருந்த தலைவர்கள் தேசியக் கொடியை காண்பித்துக்கொண்டே இருந்தனர். மாறாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திட்டமிட்டு தேசியக்கொடி அவமதிக்கப்பட்டது.

என் தட்டில் என் உணவு என்று மாட்டுக்கறிக்கு ஆதரவாக பேசியவர்கள், பசுவதைக்கு ஆதரவாக பேசியவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வந்தது மற்றொரு விநோதம். ஜல்லிக்கட்டு போராட்டத்தை மட்டு செய்யமுடியாது என புரிந்துகொண்ட மாற்றுமத சக்திகள் ஜல்லிக்கட்டு ஹிந்து மதம் சம்பந்தப்பட்டதல்ல, தமிழர் கலாச்சாரம் சம்பந்தப்பட்டது என திரிபுவாதத்தில் இறங்கின.

துவக்கத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கி பீட்டாவை தடை செய் என்று ஆரம்பித்த கோஷங்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கவில்லை என்றால் தனித்தமிழ்நாடு கோருவோம், இந்தியாவில் இருக்கமாட்டோம் என்ற அளவுக்கு திசைமாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் இப்படி திசைமாற்றம் செய்ய முயற்சித்த பலர் கூட்டத்தின் மத்தியில் அனுமதிக்கப்படவில்லை. கடல் போன்ற கூட்டத்தில் திரிபுவாதம் பேசியவர்கள் தனித்தனி தீவுகளாக பிரிந்து நின்று கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த போராட்டம் சமுதாயத்திற்கு மாபெரும் விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் சுதேசி விழிப்புணர்வு. நாட்டுக்காளைகள் காப்பாற்றப்பட்டால்தான் நாட்டுப் பசுக்கள் காப்பாற்றபட முடியும் என்ற சிந்தனை பரவலாக எழுந்தது.

நாட்டுக்காளை பாதுகாப்பிலிருந்து நாட்டுப்பாதுகாப்பு நோக்கி பயணித்த இந்த போராட்டம் பெப்சி, கோக்குக்குக்கு எதிரான போராட்டமாகவும் பீசா, பர்கருக்கு எதிரான போராட்டமாகவும் கூட உருவெடுத்தது. விவசாயம் காப்பாற்றபடவேண்டும், நீர்வளம், நிலவளம், கால்நடை வளம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற திசையில் போராட்டம் பயணித்தது.

போராட்டத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் கைப்பற்ற நினைத்ததை போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. அதே வேளையில் அரசியல் சாராத ஆனால் பிரிவினை கருத்துக்கொண்ட சில இயக்கங்கள் அமைதியாக உள்ளே நுழைய இந்த எதிர்ப்பு வழிவகை செய்தது.
எந்த நிலையிலும் நிதானம் தவறாத மத்திய மாநில அரசுகள் அதிகம் பேசாமல் தற்போது அவசர சட்டம் மூலம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ளன. இந்த இதழ் வாசகர்கள் கைகளில் கிடைக்கும்போதுதான் இந்த அனுமதியின் வெற்றி முழுமையாக விளங்கும்.

இந்தப் போராட்டத்தில் பல உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. ஜல்லிக்கட்டின் மற்றொரு அங்கமான போட்டிக்கு எதிராக முதல் தீர்ப்பை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற இந்நாள் நீதிபதி பானுமதி என்பது யாராலும் சொல்லப்படவில்லை. பீட்டாவை தமிழகத்தில் அனுமதித்த ஆ. ராசாவையும் திமுகவையும் யாரும் கண்டிக்கவில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய காரணமாக விளங்கும் காங்கிரசையும் அதன் தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், மன்மோகன்சிங் ஆகியோரையும் யாரும் கண்டிக்கவில்லை. ராகுல் காந்தியும் சோனியாவும் ஏன் இதுபற்றி வாயே திறக்கவில்லை என்று யாரும் கேட்கவில்லை. தமிழகத்தில் புதிய தலைவராக சில நாளேடுகளல் வர்ணிக்கப்படும் பாழ் நெற்றி தீபா இதுபற்றி என்ன சொல்கிறார் என யாரும் கேட்கவில்லை. ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்கு ஆதரவாக பேசிய திருமாவளவன், ஆளூர் ஷானவாஸ், பி. ஜய்யுனுலாதின் ஆகியோர் கண்டிக்கப்படவில்லை. மொத்த ஆர்ப்பாட்டமும் மோடிக்கும் பன்னீருக்கும் எதிராக திருப்பிவிட முயற்சிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இதற்கு முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சமூக விரோதிகளின் முயற்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து தனித்தமிழ் நாடு குழுமத்தை வளர்த்த சென்னை லயோலா கல்லூரி இந்த முறையும் பிரிவினை முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட புலிகள் வாழும் இடமான கனடாவிலிருந்து இந்த போராட்டத்துக்கு நிதியாதாரம் வந்ததாகவும் அதன் பின்னணியில் ம. நடராஜன் இருப்பதாகவும் கூட கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையிள் நெருக்குதலால் ஆடிப்போயிருக்கும் சசி குடும்பத்தார் இந்த போராட்டத்தை தனித்தமிழ்நாடு போராட்டமாக கொண்டுபோக ஆதரவளித்ததாகவும் திமுகவினரும் ரகசிய ஆதரவு அளித்ததாகவும் அவர்கள் விலகியிருந்தது ஒரு நாடகம்தான் என்றும் கூட பேசப்படுகிறது. இது தேச ஒற்றுமைக்கு எழுந்துள்ள மாபெரும் சவால்.

1948ல் ஐ.நா.சபை உருவானபோது உலகத்திலிருந்த நாடுகளின் எண்ணிக்கை வெறும் 55. ஆனால் இன்று உலக நாடுகளின் எண்ணிக்கை 210க்கும் மேல். அதே வேளையில் 47ல் உருவான சுதந்திர இந்தியா இன்றும் ஒரே நாடாகத்தான் இருக்கிறது. பிரிவினைவாதிகள் இதுவரை செய்த எந்த தந்திரமும் இந்தியாவின் இறையாண்மையை அசைக்கவில்லை. இனியும் அசைக்க முடியாது.
இந்த போராட்டம் பசுப்பாதுகாப்பு போராட்டமாக உருவெடுத்து வருவதும் இயற்கை வளங்கள் மீட்பு போராட்டமாக உருவெடுத்து வருவதும் அன்னிய சக்திகளை களைந்தெடுக்க உதவுமே தவிர பிரிவினைக்கு உதவாது.
ஜல்லிக்கட்டு: சங்க அமைப்புகள் ஆதரவு!
தமிழக விவசாய பாரம்பரியத்துடன் பிணைந்த திருவிழா ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் உள்ள சங்க (ஆர்.எஸ்.எஸ்) அமைப்புகள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றன. காளையுடன் விளையாடும் விளையாட்டே ஜல்லிக்கட்டு; எருதையோ, ஒட்டகத்தையோ கொன்று கொண்டாடும் விழா அல்ல இது.”

நந்தகுமார் (ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சஹ பிரச்சார் பிரமுக்)