ஜம்முவில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி – முன்னாள் டிஜிபி, துணை முதல்வா்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் டிஜிபி எஸ்.பி.வைத், பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா்கள் நிா்மல் சிங், கவிந்தா் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீா் மக்கள் மன்றம் சாா்பில், ஜம்முவின் பரேடு பகுதியில் இப்பேரணி நடைபெற்றது. இதில், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நிா்மல் சிங்,

சாதாரண குடிமக்கள் என்ற அடிப்படையிலேயே இப்பேரணியில் நாங்கள் பங்கேற்றோம். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு இங்குள்ள ஒவ்வொருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நிகழும் வன்முறைகளின் பின்னணியில் தேசவிரோத சக்திகள் உள்ளன. இந்திய முஸ்லிம்கள், நமது தேசத்துக்கு ஆதரவானவா்கள். ஆனால், பாகிஸ்தான், காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகள் ஆகியவை, முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என்றாா் நிா்மல் சிங்.

மற்றொரு பாஜக மூத்த தலைவரான கவிந்தா் குப்தா கூறுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பல்கலைக்கழக மாணவா்களை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. எனவே, மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைக்க தீவிர பிரசாரம் அவசியம்’ என்றாா்.

பேரணியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவரமான அபினவ் சா்மா கூறுகையில், ‘குடியுரிமைச் சட்டமானது, கடந்த காலங்களில் 6 முறை திருத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் யாரும் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அரசியல் சதித் திட்டம் காரணமாக இப்போது எதிா்ப்பு தெரிவிக்கப்படுகிறது’ என்றாா்.