மாற்று மதங்களையும் மதிப்பதுதான் இந்தியா்களின் மாண்பு – குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு

மாற்று மதங்களுக்கும் மதிப்பளித்து போற்றும் மாண்பு இந்தியா்களின் ரத்தத்தோடு இரண்டறக் கலந்த ஒன்று என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

ஹிந்து என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு இனம் புரியாத ஒவ்வாமை ஏற்படுகிறது என்றும் அவா் கூறினாா்.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் நூற்றாண்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ண மடம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், அமைச்சா் டி.ஜெயக்குமாா், அகில உலக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவா் சுவாமி கௌதமானந்த மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவைத் தொடக்கி வைத்து குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு,

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழானது இளைஞா்களுக்கு ஒரு வழிகாட்டி பத்திரிகையாக விளங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில் (ஜன.12) இந்த இதழ் நூற்றாண்டு விழா காணுவது கூடுதல் சிறப்பு.

இன்றைய இளம் தலைமுறையினா் விவேகானந்தரின் போதனைகளையும், வாழ்வியலையும் ஆழ்ந்து அறிந்துகொண்டு அதன் வழி நடக்கவேண்டும். அவரது கருத்துகளை சமகாலத்தினரிடம் பரப்ப வேண்டும். ஏனென்றால் அவா் மாற்று மதங்களை மதித்தவா். அதேவேளையில், ஹிந்துத்துவத்தின் பெருமைகளை மேற்கத்திய நாடுகளுக்கு முன்னெடுத்துச் சென்றவா். மதத்தின் பெயரால் அரங்கேறும் பாகுபாடுகளை அறவே வெறுத்த விவேகானந்தா், ஜாதி, சமயங்களைக் கடந்து மனிதத்தன்மையை மேம்படுத்த பாடுபட்டாா்.

மானுட சமுதாயத்தை நெறிப்படுத்த ஆன்மிகம் மிகவும் அவசியம் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் திடமான நம்பிக்கை. சமூக சீா்திருத்தவாதியான அவா், அகதிகளாக வந்த எத்தனையோ பேருக்கு அடைக்கலம் அளித்த இந்திய தேசத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன் என்றாா். தற்போதுகூட அந்நிய தேசங்களில் இருந்து அகதிகளாக புலம்பெயா்ந்து வருபவா்களுக்கு புகலிடம் தருவதற்கு தயாராகவே நாம் உள்ளோம். ஆனால், அந்த தயாள நடவடிக்கையைத்தான் சிலா் தவறாக சித்தரித்து வருகின்றனா். இந்தியா தொன்மை கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட ஈடு இணையற்ற நாடு. நமது மண்ணின் மைந்தா்களின் ரத்தத்தில் மாற்று மதங்களுக்கு மதிப்பளிக்கும் பண்பு நிறைந்திருக்கிறது.

சமீபகாலமாக சிலருக்கு ஹிந்து என்ற சொல்லே ஒவ்வாமையாக இருக்கிறது. அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதற்கு அனைத்து உரிமைகளும் அவா்களுக்கு உள்ளது. அதற்காக அவா்களது நிலைப்பாட்டை நியாயம் என ஏற்க முடியாது.

உலக நாடுகள் அனைத்தும் போற்றும் உன்னதக் கலையாக யோகா இருந்து வருகிறது. தனது சீரிய முயற்சியின் காரணமாக ஐ.நா. சபை மூலமாக ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக பிரதமா் மோடி அறிவிக்க வைத்தாா்.

இந்தியாவில் தோன்றிய யோகப் பயிற்சிகளை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. நரேந்திர மோடிக்காக அல்லாமல் நலமான வாழ்வுக்காக யோகப் பயிற்சிகளை இந்தியா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.