ஜன.,1 முதல் புரி ஜெகந்நாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு

12-ம் நூற்றாண்டுகாலகட்டத்தை சேர்ந்த ஜெகந்நாதர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜன 1-ம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு வர உள்ளது.

இது குறித்து புரி ஜெகந்நாதர் கோவிலின் நிர்வாக தலைமை அதிகாரி ரஞ்சன்குமார்தாஸ் கூறி இருப்பதாவது:கோயிலின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பது நமது பொறுப்பு. எதிர்பாரத விதமாக ஒரு சில பக்தர்கள் ஜீன்ஸ் உடைகள் அணிந்தும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணிந்தும், அரை டவுசர் அணிந்தும் பீச் மற்றும் பார்க்குக்கு செல்வதை போல் கோவிலுக்கு வருகின்றனர். இது ஒன்றும் பொழுது போக்கும் இடமல்ல மேலும் அணிந்து வரும் ஆடைகள் மற்ற பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

இதனை தவிர்க்கும் வகையில் கண்டிப்புடன் கூடிய ஆடை கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றார். மேலும் அவர் கூறுகையில் எந்த வகையான ஆடைகளை அனுமதிக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.கோயில் நிர்வாகம் விரைவில் பக்தர்களிடையே ஆடைக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கும் என்றார்.