நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கபடாத நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் அதை நிர்ணயிக்க முடியுமா? என்ற குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அவர்களின் கேள்விக்கு, ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம், அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கப்படவில்லை என ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் மீது, ஒரு மாதத்திற்குள் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி இருந்தால், அதன்மீது மூன்று மாதங்களுக்குள் அவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
மேலும் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு, சிறப்பு அதிகாரம் அரசியல் அமைப்பு பிரிவு 142ஐ பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்பை பயன்படுத்தி, சட்டமான நிலையில், தமிழக அரசிதழில் வெளியானது. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில், நமது நாட்டின் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு தரப்பில், உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகள் எழுப்பப்பட்டு, அவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில், 2025 நவம்பர் 11அன்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தரும்படி குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும் குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் தனி உரிமை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றங்களால் வரையறுக்க முடியாது என்றும், நமது அரசிலமைப்பின் 201வது பிரிவின் கீழ், குடியரசுத்தலைவரின் தனி உரிமை நீதிமன்ற விசாரணைக்கு உள்பட்டது அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான இந்த அரசியல் சாசனஅமர்வு, அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவின் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது. ஆளுநரின் சட்டம் இயற்றும் பணியை வேறு எந்த அரசியலமைப்பு அதிகாரமும் மாற்றம் செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும் எந்த வகையிலும் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் உத்தரவுகளை மாற்ற முடியாது எனவும் தெரிவித்தது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல், பரிசீலனைக்காக குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தல், ஒப்புதல் வழங்காமல் அதற்குரிய காரணங்களுடன் மசோதாவை சட்டசபைக்கு மீண்டும் திருப்பி அனுப்புதல் என மூன்று வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், பணமசோதா அல்லாத மசோதாக்களை மட்டுமே ஒப்புதல் தராமல் ஆளுநர் திருப்பி அனுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவின் படி, அந்த மூன்று வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை. எனவே மாநில அமைச்சரவையின் உதவியையோ, ஆலோசனையையோ ஆளூநர் பெற வேண்டிய கட்டாயமில்லை என்றும், ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டவர் இல்லை எனவும், ஆளுநரின் தனி உரிமை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல எனவும், தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றம் ஆய்வு செய்வதற்கு அரசியல் சாசனத்தின் பிரிவு 361 முற்றிலும் தடை விதிக்கிறது என்றும், ஆளுநர் தனிப்பட்ட விலக்குரிமையை பெற்றிருந்தாலும், ஆளுநரின் அலுவலகம் உச்சநீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என தெரிவித்துள்ளது.
நமது அரசியலமைப்பு சட்டத்தில், ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும் போது, ஒவ்வொரு முறையும் அரசியல் சாசன பிரிவு 143ன் கீழ், நீதிமன்றத்தின் ஆலோசனையை குடியரசுத்தலைவர் கேட்க வேண்டிய அவசியமில்லை.
ஒருவேளை மசோதா தொடர்பான சட்ட ஆசோசனைகள் தேவைப்பட்டால், நீதிமன்றத்தை குடியரசுத்தலைவர் அணுகலாம். கடந்த காலங்களில் அவ்வாறு நடந்திருக்கிறது என தெரிவித்துள்ளது.
அரசியல் சாசன பிரிவு 201ன் படி, குடியரசுத்தலைவரின் தனி உரிமை பயன்பாட்டிற்கு, நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்றும், நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாக கட்டுப்படுத்தவும் முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒரு மசோதா காரணமின்றி நீண்ட காலத்துக்கு எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டிருந்தால், அந்தச் செயல் பாட்டை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தி, தேவைப்பட்டால் ஆளுநர்களுக்கு குறிப்பிட்ட அந்தவொரு விஷயத்தில் வரையறுக்கப்பட்ட அளவில் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனாலும் அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் அப்படி உத்தரவுகளைப் பிறப்பிக்காது. அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொருத்தது எனக் குறிப்பிட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் விளக்கத்தை ஏற்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், ஹிமாசலப்பிர தேசம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட கருத்துக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசன சட்டத்தில் குடியரசுத்தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலேயே தங்களது கருத்துக்களை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கட்டுரையாளர் : எஸ். காசி
மத்திய அரசு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்