‘செரோதா’ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் காமத் சகோதரர்கள் தலா ரூ.72 கோடி ஊதியம்

செரோதா (Zerodha) பங்குச் சந்தை தரகு நிறுவனம் ஆகும். 2010-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவை தலைமைஇடமாகக் கொண்டு செயல்படுகிறது. சகோதரர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினர். இந்தியாவில் செயல்படும் பங் குச் சந்தை தரகு நிறுவனங்களில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக செரோதா உள்ளது. இந்நிறுவனத்தின் பயனாளர் எண்ணிக்கை 64.8 லட்சமாக உள்ளது,
2022-23 நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ.6,875 கோடி வருவாய் ஈட்டியது. அதேபோல் 2022-23நிதி ஆண்டில் லாபம்ரூ.2,907 கோடியாக உயர்ந்தது. இது 39 சதவீத உயர்வு ஆகும். செரோதா நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.30,000 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில், கடந்த நிதி ஆண்டில் காமத் சகோதரர்கள் ஊதியம் உட்பட லாபப் பங்கீடாக ரூ.192 கோடி பெற்றுள்ளனர். இதில் ஊதியம் மட்டும் தலா ரூ.72 கோடியாகும். சிஇஓ நிதின் காமத்தின் மனைவியும் செரோதா நிறுவனத்தின் முழுநேர இயக்குநருமான சீமா பாட்டில் ரூ.36 கோடியும், தலைமை செயல்பாட்டு அதிகாரி வெனு மாதேவ் ரூ.15 கோடியும் ஊதியமாக பெற்றுள்ளனர்.