சென்னையில் 136 சேவை அமைப்புகளின் சங்கமம்

 

 

நாட்டில் துயருற்றவர்களுக்காக அயராது பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ராஷ்ட்ரீய சேவாபாரதி. சேவை அமைப்புகளை ஒன்றுதிரட்டி சேவை பற்றிய அறிவு, சட்டங்களைப் பற்றிய ஞானத்தை அளிக்கவும் சரியான தேசிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தவும் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள பல நூற்றுக்கணக்கான சேவை அமைப்புகளை ஒன்றுதிரட்டி ஒரே இடத்தில் சங்கமிக்கும் ‘சேவா சங்கமம்’ நிகழ்ச்சியை சேவாபாரதி தமிழ்நாடு சென்னையில் செப்டம்பர் 16, 17 தேதிகளில் நடத்தியது. 136 தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் ஸ்வாமி விமூர்த்தானந்தா மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தென்பாரத தலைவர்  வன்னியராஜன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சேவா பிரமுக் பராக் அப்யங்கர் சிறப்புரை ஆற்றினார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ராஷ்ட்ரீய சேவாபாரதியின் அகில பாரத பொதுச் செயலாளர் ரிஷிபால் தட்வால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சேவா சங்கமம் நிகழ்ச்சியின் வரவேற்பு குழு தலைவர் எம். பொன்னுசாமி வரவேற்றுப் பேசினார்.

தொண்டு அமைப்புகள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது பலருக்கும் உபயோகமாக இருந்தது. சேவை செய்பவர்களின் மனப்பான்மை, அரசின் நலத்திட்டங்கள், வணிகவரி துறை சம்பந்தமான விவரங்கள் பற்றியும் அமர்வுகள் இருந்தன. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர்

பூ.மு. ரவிக்குமார் நீரின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். ‘நதிநீர் காப்போம், பாரதம் காப்போம்’ என்று கூறி அனைவரையும் உறுதிமொழி எடுக்க வைத்தார். வணிகவரித் துறை சம்பந்தமாக பட்டயக் கணக்காளர்களான சத்தியநாராயணாவும்  கோபால கிருஷ்ணராஜுவும்  விரிவாகப் பேசியதோடு, பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்தார்கள்.

கலந்துகொண்ட தொண்டு அமைப்புகளின் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கலந்துகொண்ட அமைப்புகளின் பிரசுரங்கள் எல்லோருக்கும் வழங்கப்பட்டன.

சுவாமி விமூர்த்தானந்தா மகராஜ்: பாகிஸ்தான் முன்னேறினால் பாகிஸ்தானுக்கு நன்மை. சீனா முன்னேறினால் சீனாவுக்கு நன்மை. அமெரிக்கா முன்னேறினால் அமெரிக்காவிற்கு நன்மை. ஆனால் பாரதம் முன்னேறினால் உலகிற்கே நன்மை உண்டாகும். இது விவேகானந்தர் வாக்கு. ஆக உலக வளர்ச்சிக்காக நம்நாடு முன்னேற வேண்டும் என குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத சேவா பிரமுக் பராக் அப்யங்கர்: எதிர்பார்ப்புகள் இல்லாமல் சேவை செய்வது இந்த நாட்டின் கலாச்சாரம். அதையே ஆர்.எஸ்.எஸ். பின்பற்றுகிறது.

டாக்டர் கிரண்பேடி: பாரதம் வலிமையுடனும் வளமுடன் விளங்க ஐந்து ‘S’ நாம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒன்று ம்ஸ்காரம் அதாவது பண்பாட்டுடன் கூடிய வாழ்க்கை.  இரண்டாவதாக சேவா. பண்பாட்டை கடைப்பிடித்தால் எந்த செயலையும் சேவையாக செய்யும் உணர்வு ஏற்படும். மூன்றாவதாக சுவச்சுதா அதாவது தூய்மை. தூய்மை முதலில் நம் எண்ணத்தில் இருந்து துவக்க வேண்டும். அடுத்து உடல். பிறகு நமது வீடு, தெரு, ஊர், நாடு என்று பரவ வேண்டும். நான்காவதாக ங்கடன் அதாவது ஒருங்கிணைப்பு. ஒற்றுமையாக செயல்படும் போது அதற்கு சக்தி அதிகம். இவை நான்கும் இருந்தால் அங்கு ஐந்தாவதாக த்சங்கம் அதாவது நல்லோர் இணக்கம் காணப்படும். இந்த ஐந்தையும் கடைபிடித்தால் சாந்தி நிலவும். சேர்ந்து பிரார்த்தனை செய்வது, சேர்ந்து சாப்பிடுவது, சேர்ந்து பணிகளில் ஈடுபடுவது சூழ்நிலை உருவாகும்.  இவை உருவானால் நமது நாடு வலிமை படைத்ததாகும்.

தொகுப்பு: பால. மோகன்