சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கு கடன்

மிக்ஜாம் புயல் காரணமான பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுவதாக சென்னை ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலின் தாக்குதல் காரணமாக அண்மையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறு சீரமைப்புக்கான நிதியுதவியை தமிழக அரசின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும்சேவைத் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சமும் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.3 லட்சமும் 6 சதவீத வட்டியில் வழங்கப்படும். நிதி உதவி பெற கடந்த செப்.30-ம் தேதியன்று நிறுவனம் நடைமுறையில் இருக்க வேண்டும்.

முதல் 3 மாதங்களுக்கு வட்டி மட்டும் செலுத்த வேண்டும். 4-வது மாதம் முதல் 21-வது மாதம் வரை பிரதி மாத அசல் தவணையுடன் சேர்ந்து வட்டி செலுத்த வேண்டும். இத்திட்டம் வரும் 31-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.

இதற்காக மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து நேற்றுமுதல் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (ஜன.11)ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆர்விடவரின் 2-வது தளத்திலும், நாளை(ஜன.12) அம்பத்தூர் அய்மா சங்கத்திலும், ஜன.13-ம் தேதி வியாசர்பாடி இஎச் சாலையில் உள்ள வணிக வளாகத்திலும் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு நிதியுதவி முகாமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் அனைவரும்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.