செங்கொடி மாயம், தாமரைக் கொடி பட்டொளி!

திரிபுராவில் கால் நூற்றாண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இந்த வெற்றிக்கு சூத்ரதாரியாக செயல்பட்டவர்களில் முதன்மையானவர் 53 வயதான சுனில் தேவ்தர். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக வடகிழக்கில் அடியெடுத்து வைத்தவர். பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டபோது சுனில் தேவ்தர் மேலாளராகச் செயல்பட்டார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியொன்றில் அவர் வெற்றி வரலாறு பேசியதிலிருந்து:

திரிபுராவில் நாணயமான நம்பகமான எதிர்க்கட்சி இல்லையே என்ற ஏக்கம் மக்களிடம் காணப்பட்டது. மார்க்சிஸ்ட் அரசு ஒழிய வேண்டும் என்று மக்கள் மனமார விரும்பினார்கள். ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருந்தார்கள். காங்கிரசின் செயல்பாடு அவர்களை விரக்தி அடைய வைத்துவிட்டது. 2013ல் நடைபெற்ற தேர்தலை உன்னிப்பாக கவனித்தால் 45 சதவீத மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. நான் 2013ல் திரிபுராவுக்கு பொறுப்பாளராக வந்தபோது இங்குள்ள நிலைமையை நன்கு கவனித்தேன். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலையும் உன்னிப்பாக உற்று நோக்கினேன். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் காங்கிரஸ் மீது மக்களுக்கு துளியும் நம்பிக்கையில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

நான் திரிபுராவுக்கு வந்தபோது முதல்வர் மாணிக் சர்க்கார் நல்ல மனிதர், எனவே அவரைப் பற்றி அதிகமாக விமர்சிக்க வேண்டாம் என்று கூறினார்கள். நான் முதல் ஆறு மாதம், அவரைப் பற்றி எந்த விமர்சனத்தையும் ஆனால் அதன் பிறகு அவரை விமர்சிக்கத் தொடங்கினேன். மக்களும் அதை விரும்பினார்கள், ஏற்றுக்கொண்டார்கள். மாணிக் சர்க்கார் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை புரிந்துகொண்டேன். இடது சாரி அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக மக்களின் கோபம் திரளத்தொடங்கியது. அதற்கான மேடையாக பாஜக செயல்பட்டது. இதனால் பாஜகவை நோக்கி மக்கள் வரத்தொடங்கினார்கள்.

கிராமங்களில் கூட மார்க்சிஸ்டுகளுக்கு எதிரான சூழ்நிலை வலுக்கத் தொடங்கியது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் பாஜகவில் சேர முன்வருவதாக தகவல் வரும். உடனே நான் அங்கு செல்வேன். ஒரே நேரத்தில் 6 அல்லது 7 இடங்களிலிருந்து தகவல் வந்தால் ஒரே ஒரு இடத்துக்கு மட்டும் தான் நான் செல்வேன். மற்ற இடங்களுக்கு நம்பிக்கைக்குரிய மற்றவர்களை அனுப்பிவைப்பேன். மக்களுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொண்டே இருந்தேன். தலைமைப் பண்பு உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர்களுக்கு முகாமில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாநில அளவிலான கூட்டங்களிலும் அவர்கள் கலந்துகொண்டார்கள். இப்போது திரிபுராவில் எங்கெல்லாம் மார்க்சிஸ்ட் கொடி பறக்கிறதோ அங்கெல்லாம் பாஜகவின் கொடி பறப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

மோடி தூத் என்பது எனது சிந்தனையில் விளைந்த சிசு. 25 அல்லது 30 இளைஞர்களை ஒரு குழுவாக கட்டமைத்தோம். தினந்தோறும் இந்த இளைஞர்கள் மோடியின் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்தபடி மக்களிடம் துண்டுபிரசுரங்களை விநியோகித்தார்கள். மோடி அரசின் சாதனைகள் இந்த பிரசுரங்களில் பட்டியலிடப்பட்டிருந்தன. இத்துடன் சேர்த்து ஒரு படிவமும் அளிக்கப்பட்டது. அதில் பிரச்சினைகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டோம்.

கிராமங்களில் உள்ள மக்களை நேரடியாக அணுக முடியாது. ஏனெனில் அவர்களை மார்க்சிஸ்ட்கள் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் ரயில்களில் பயணிக்கும்போது இந்த பயத்துக்கு இடமில்லை. அனைவருமே அறிமுகம் இல்லாதவர்கள்தான். தினந்தோறும் 500 முதல் 700 பேர் வரையிலான விவரங்களை சேகரித்தோம். அவர்களை நாங்கள் தொடர்புகொண்டோம். இதற்காக ஒரு கால்செண்டரை பயன்படுத்திக்கொண்டோம். ரயிலில் கொண்ட தொடர்பு காற்றோடு போய்விடவில்லையே, நம்மை அணுகி நம்மிடம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்களே, நம் மீது பரிவு காட்டுகிறார்களே என்ற உணர்வு மக்களிடம் நாளுக்கு நாள் மேலோங்கியது. இதனால்தான் பாஜகவை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

அமித்ஷாஜி, ‘காங்கிரஸ் அற்ற பாரதத்தை உருவாக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு நாங்கள் உழைத்து வருகிறோம். ஆனால் நீங்கள் மார்க்சிஸ்ட் அற்ற பாரதத்தை உருவாக்க உழைக்கவேண்டும்’ என்று என்னிடம் கூறினார். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மார்க்சிஸ்ட்களின் ஆட்சி இல்லை. வடகிழக்கு மாநிலம் ஒன்றின் பொறுப்பை எனக்குத் தாருங்கள் என்று நான் அமித்ஷாஜியிடம் வேண்டுகோள் விடுத்தேன். நான் 1991ல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக வடகிழக்கு பாரதத்திற்கு வந்தேன். இப்பிராந்தியத்தோடு உணர்வார்ந்த பிணைப்பு ஏற்பட்டுவிட்டது. நான் ‘மை ஹோம் இந்தியா’ தொண்டு நிறுவனத்தை தொடங்கினேன். இது வடகிழக்கு மாநில மக்களுக்காக பாடுபட்டது. மேகாலயா மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் 8 ஆண்டுகள் மேகாலயாவில் தங்கியிருந்து பணியாற்றினேன். என்னால் மேகாலய பழங்குடி மக்களின் மொழியை பேச முடியும். ஆனால் எனக்கு திரிபுராவின் பொறுப்பு அளிக்கப்பட்டது. ‘மூன்று ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. கால் நூற்றாண்டுக் கால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிராக மக்களின் உணர்வு வலுத்து வருகிறது. பாஜகவை வலுப்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்துங்கள்’ என்று என்னிடம் அமித்ஷாஜி கூறினார். அதை இப்போது நிறைவேற்றிக் காட்டிவிட்டேன்.

மக்களின் எதிர்பார்ப்புகள் இப்போது மேலும் அதிகரித்துள்ளன. சவால்கள் கடுமையாகியுள்ளன என்று நான் உணர்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஒரேயடியாக மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். நான் அரசாங்கத்தில் எந்த பொறுப்பையும் வகிக்கப்போவதில்லை. எனினும் பாஜக அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை நான் உறுதி செய்வேன். உடனடியாக நான் திரிபுராவை விட்டு செல்லப்போவதில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நான் இங்கேயே இருப்பேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் அரசால் நிறைவேற்றப்பட  கவனம் செலுத்துவேன்.

(தமிழில்: ஆர்.பி.எம்.)