சூழல் சிநேகிதமான மார்கழி அதிகாலை!

பன்னிரண்டு மாதங்களில் மார்கழி சிறப்பான மாதம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கண்ணன் கூறுகிறான். ஹிந்துப் பெரியோர்கள் மார்கழி மாதம் பிறந்ததும் அதிகாலையில் ஆண்களை பஜனை என்ற பெயரிலும் பெண்களை கோலம் என்ற பெயரிலும் வெளியே கொண்டு வருகின்றனர். இது ஏன்? மார்கழி மாதத்தில் இரவு நேரம் அதிகம். அதே போல் பகல் நேரம் குறைவு. எனவே அப்போது பூமி இயல்பாகவே குளிர்ந்து விடுகிறது. பூமி குளிர்ச்சி அடைவதால் இரவு முழுவதுமாக வளிமண்டலம் தன்னுள் நெருங்கி பூமியை மிக நெருக்கமாக சூழ்கிறது. வளிமண்டலத்தின் இறுதியில் இருக்கும் பிராணவாயு அப்போது பூமியின் மேற்பரப்பை நெருங்கி தரையைச் சுற்றி இருக்கிறது. இந்தத் தூய்மையான பிராண வாயுவை சுவாசிக்க, வீட்டிற்குள் இருப்பவர்களை கோலம், பஜனை என்ற பெயரில் வெளியே கொண்டுவந்து அந்தத் தூய பிராணவாயுவை சுவாசிக்க வைக்கிறார்கள். சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கவும் வியாதிகள் பரவாமல் இருக்கவும் கிருமிகளை கவர்ந்து தன்நோக்கி இழுக்கும் பறங்கிப்பூவை கிருமி நாசினியான பசுவின் சாணத்தில் வைக்கின்றனர். இப்படி மார்கழித் திங்கள் அறிவியல்பூர்வமாக சிறப்புடையதாக உள்ளது.