சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ‘பூமி வந்தனம்- கங்கா வந்தனம்’ என்ற தலைப்பில் சுற்றுப்புறசூழலை பேணி காக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாம் வாழும் பூமியை பாதுகாப்பதுடன், தண்ணீரின் பயன்பாடு, சிக்கனம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
1,008 பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுப்புறசூழலை பாதுகாப்பதற்காக 2 சிறிய மண் பானைகளை வைத்து பூஜை செய்தனர். இதில் தண்ணீர் நிரப்பிய பானையை கங்காதேவியாகவும், மண் நிரப்பிய பானையை பூமாதேவியாகவும் உருவகப்படுத்தி மாணவிகள் பூக்களால் அர்ச்சனை செய்து பூஜை செய்தனர்.
சுற்றுச்சூழலை பராமரித்தலை வலியுறுத்தி பஞ்சாப் அசோசியேஷன் பள்ளி மாணவ-மாணவிகள் காளிங்க நர்த்தனம் ஆடினர். பூமி மற்றும் தண்ணீரை பாதுகாக்க வேண்டி மாணவிகள் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.