சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முதல் மின்சார பேருந்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சிறப்பம்சங்கள் என்னென்ன?

சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கிலும், மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழகத்தில் இயக்க முன்னோட்டமாக, இன்று (திங்கள்கிழமை) ஒரு மின்சார பேருந்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த மின்சாரப் பேருந்து, பரிசோதனை அடிப்படையில் நாள்தோறும், சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையார் வழியாக திருவான்மியூர் வரை காலை 2 நடையும், மாலை 2 நடையும் இயக்கப்படும்.

முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த பேருந்தில், தானியங்கி கதவுகளும், வழித்தடங்களை அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. 32 இருக்கை வசதிகள் கொண்ட இப்பேருந்து , இந்திய போக்குவரத்து தரக் கட்டுப்பாடு அமைப்பினால் தகுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தில் பேட்டரி இருப்பு நிலை, மற்றும் வெப்பநிலை, ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின்கசிவினைக் கண்டறிந்து, அதனை தானாக செயலிழக்க வைத்தல், ஆகியவற்றை ஒருங்கிணைத்து ரிமோட்டில் கண்காணிக்கக் கூடிய ஐ-அலர்ட் சிஸ்டம் என்ற நவீன தொழில்நுட்ப அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.