சுமுகமான முறையில் அமைதியாக நடந்த தேர்தல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67, தருமபுரியில் 75.44, சிதம்பரத்தில் 74.87 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35, தென் சென்னையில் 67.82, மதுரையில் 68.98, வட சென்னையில் 69.26 சதவீதமும் பதிவாகி உள்ளன. கடந்த 2019 தேர்தலைவிட தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. பல இடங்களில் வெயில்கடுமையாக இருந்ததால், மதியம்3 மணி முதல் 6 மணி வரை அதிகளவிலான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல், மாலை 6 மணிக்கு பிறகும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும்.
தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுஎண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் தேர்தல் நடக்க இருப்பதால், தமிழக எல்லைப் பகுதிகளில் மட்டும் இனி தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு மூலம் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இருப்பினும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம்எடுத்து செல்லக்கூடாது. வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான எந்த ஒரு புகாரும் வரவில்லை. ஒருஇடத்தில் மட்டும் புகார் வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தமிழகத்தில் தேர்தல்சுமுகமான முறையில் அமைதியாக நடந்துள்ளது என்றார்.