சுதந்திர போராட்டத்தில் வை.மு. கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி, டிசம்பர் 1, 1901ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார்.

வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரை சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார். அதனால் அவரது பாட்டி வேதவல்லி அம்மாளும் அவரது சிற்றப்பா மனைவியான கனகம்மாளும் அவரை வளர்த்தனர். தன்சிற்றப்
பாதிருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார்.

சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம் என்பதால் 1907ல் கோதைநாயகிக்கு ஐந்தரை வயதானபோது திருவல்லிக்கேணியில் வசித்து வந்த
வை.மு. சீனிவாச ஐயங்காரின் மூன்றாவது மகனான வை.மு. பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்.  அக்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பெயருக்கு முன்னால் வை.மு. என்ற எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டனர். வைத்த மாநிதி என்பது அக்குடும்
பத்தினரின் குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயராகும். முடும்பை என்பது அவர்களின் பூர்வீக ஊராகும். கோதை
நாயகியையும் திருமணத்துக்குப் பின்னர்
‘வை.மு.’ என்ற குடும்பப்பெயரை இணைத்து வை.மு. கோதைநாயகி என அழைத்தனர். கோதை நாயகியின் வெற்றிக்கு அவரது செயல்கள் அனைத்திலும் கை கொடுத்து நின்றவர் கணவர் பார்த்தசாரதி தான். திருமணத்தின்போது கோதைநாயகி பள்ளி சென்று படித்தவரில்லை. பார்த்தசாரதி, அவரைக் கல்வி கற்கச் செய்தார். கோதைநாயகி, தனது மாமியாரிடம் தெலுங்கு மொழியைக் கற்றார்.

தொடக்கக் காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழங்கதைகளைச் சொல்லி வந்தார். சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கற்பனைக் கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. இதனைக் கண்ட அவரது கணவர்,  அவரிடம் காணப்பட்ட படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு மனைவியை பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாடகங்களைப் பார்த்து ரசித்த கோதைநாயகிக்குத் தானே நாடகங்களை எழுதவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, இந்திர மோகனா என்ற நாடகத்தை உருவாக்கினார். இந்நாடகத்தை 1924ம் ஆண்டு நோபில் அச்சகத்தார் மூலம் நூலாக வெளியிட்டார். இந்நாடகத்தை தி இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின. தனது முதல் நூலுக்குக் கிடைத்த வெற்றி கோதைநாயகியை மேலும் எழுதத் தூண்டியது. அதனைத் தொடர்ந்து ஒரு நாடகத்தையும் எழுதி முடித்தார். அதன் பிறகு பட்டம்மாளிடம் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

கோதைநாயகி, நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை.  இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.இதன் மூலம் சுதந்திரப் போராட்ட கூட்டங்களில் எழுச்சியுரை ஆற்றி தேச விடுதலை போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்!

பத்திரிகையாளராக, நாவலாசிரியராக இருந்த அம்மையார் தேச விடுதலைப்போரில் தன்னை இணைத்துக்கொண்டார் தந்தை சீனிவாச ஐயங்கார் இல்லத்துக்கு 1925ம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்தபோது வை.மு.கோதைநாயகி  காந்தியைச் சந்தித்தார். இந்நிகழ்வு வை.மு.கோவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. காந்தியின் எளிமையான தோற்றம், அம்மையாரை மிகவும் கவர்ந்தது. பட்டாடையே உடுத்திப் பழக்கப்பட்ட வை.மு.கோ. அது முதல் கதர் புடவையையே அணியத்தொடங்கினார். தவிர வேறு நகைகளை அணிவதில்லை என்று உறுதி பூண்டு அதை இறுதி வரையில் கடைப்பிடித்தார். 1931ல் மகாத்மா காந்தி கள்ளுக்கடை மறியலில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது திருவல்லிக்கேணியில் திருமலாச்சாரி பள்ளி இருக்குமிடத்தின் அருகே இருசப்ப கிராமணித் தெருவில் இருந்த கள்ளுக்கடை முன் மறியல் செய்தார். சென்னை சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால், தலைவர்கள் பலருடன் கோதைநாயகியும் கைது செய்யப்பட்டார். ஆறு மாதச் சிறைத் தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்ததால் கூடுதலாக நான்கு வாரம் சிறைத் தண்டனை அம்மையாருக்கு விதிக்கப்பட்டது.

1932ல் ‘லோதியன் கமிஷனுக்கு’ எதிராக நடந்த போராட்டத்திலும் அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கத்தில் கலந்துகொண்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறையில் இருந்தபோது “சோதனையின் கொடுமை”, “உத்தமசீலன்” ஆகிய புதினங்களை எழுதினார். இவர் சிறையில் இருந்தபோது ஜகன்மோகினி இதழை இவரது கணவர் வை.மு.பார்த்தசாரதி தொடர்ந்து நடத்தினார்.

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் காந்தி மறைந்த பின்பு 13ம் நாள் அவரது அஸ்தி நாடெங்கும் கடலில் கரைக்கப்பட்டது. சென்னையில் நடந்த அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மையார், காந்தியின் நினைவாக மார்ச் மாதம் 2ம் நாளன்று மகாத்மாஜி சேவா சங்கம் என்ற சங்கத்தைத் திருவல்லிக்கேணியில் தொடங்கினார். அச்சங்கத்தின் வாயிலாக ஏழைகளுக்கும் ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்தார்.

வை.மு.கோ. அம்மையாரின் தேசிய சேவையைப் பாராட்டி காங்கிரஸ் அரசாங்கம் அவருக்குச் செங்கல்பட்டுக்கு அருகே ௧௦ ஏக்கர் நிலத்தை வழங்கிச் சிறப்பித்தது. அவ்வாறு தனக்குக் கிடைத்த நிலத்தைப் பூமிதான இயக்கத்திற்காக வினோபாவேயிடம் அம்மையார் வழங்கிவிட்டார்.

1956ம் ஆண்டில் அம்மையாரின் ஒரே மகனான ஸ்ரீநிவாசன் திடீரென்று இறந்தார். அவரது மறைவு அம்மையாரை நிலைகுலைய வைத்துவிட்டது. அம்மாள், தன் மகன் இறந்து தான் மட்டும் இருக்கிறோமே என்று வருந்தி சரியாக உணவு உண்ணாமல் உறக்கமின்றி உடம்பை வருத்திக் கொண்டதனால் அம்மையார் கொடிய காச நோய்க்கு ஆளானார். தாம்பரம் காசநோய் மருத்துவ மனையில் உரிய சிகிச்சை பெற்றும் பலனின்றி 1960ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் நாள் மருத்துவமனையிலேயே இறந்தார்.

115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் “எழுத்தே உலகம்” என்று இயங்கினார்!

அவர்கள் வழியில் நாமும் நடப்பதே அவர்களுக்கான உண்மையான அஞ்சலி