பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினம்! அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகம்!! மே 7 முதல் 10 வரை பயங்கரவாதத்தின் மீது நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றித்தான் சொல்கிறோம். மூன்று கட்டமாக நிகழ்த்தப்பட்ட இந்த பதிலடி நடவடிக்கை, ஏப்ரல் 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 ஹிந்து சகோதரர்களின் பலிதானத்திற்கான மிகச் சரியான சமர்ப்பணமாக அமைந்தது.
முதலில் இந்தத் தாக்குதல் நடவடிக்கை நடந்த நாளும், இதன் பெயரும் (ஆபரேஷன் சிந்தூர்) மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஏப்ரல் 22ல் கொல்லப்பட்ட பாரத (ஹிந்து) சுற்றுலாப் பயணிகளின் மரணம் நிகழ்ந்து 16 நாட்கள் கழித்து, ஹிந்து சமய நம்பிக்கைகளின் படி இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடைய அவகாசம் அளித்து, மிகச் சரியாக மே 7 அன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
பாரத வெறுப்பின் அடிப்படையில் பிறந்த பாகிஸ்தான் அரசிடம் நியாயமான பதிலை பாரதம் எதிர்பார்க்கவும் இல்லை. அதேசமயம், ராஜதந்திர முறையில் தேவையான நேரம் அந்நாட்டிற்குக் கொடுக்கப்பட்டது. அந்நாடு திருந்தவில்லை. எனவே தான் பதிலடி கொடுக்க பாரதம் தீர்மானித்தது.
அதேபோல, குடும்பப் பெண்களின் கண்ணெதிரில் அவர்களது கணவர்கள் கொல்லப்பட்ட அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மிகப் பொருத்தமான பதிலடியாக, ‘குங்குமத் திலகம்’ என்று பொருள் படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. இதனை முன்னின்று நடத்தியவர்களில் ராணுவ கர்னல் ஷோபியா குரேஷி (இவர் ஒரு இஸ்லாமியர்), விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரும் உண்டு. இவர்கள் தான், சிந்தூர் நடவடிக்கை குறித்து மே 7 அன்று செய்தியாளர்களுக்கு விளக்கினர்.
துல்லியமான ஊடுருவல் தாக்குதல்கள்:
மே7 அதிகாலை (1.30 மணி முதல் 2.00 மணி வரை) பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய நமது போர் விமானங்கள், ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளாலும், காமிகேஸ் ட்ரோன்களாலும் பாக். ஆதரவுடன் இயங்கிவந்த பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களைத் தாக்கி அழித்தன. அரைமணி நேரத்தில் ஏவப்பட்ட 24 ஏவுகணைகளால், 9 இடங்களில் இருந்த பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டுவந்த பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் தகர்க்கப்பட்டன.
பஹவல்பூர், முசபராபாத், முரிட்டோ, சியால்கோட், கோட்லி, பர்னாலா ஆகிய 6 இடங்களில் இருந்த பயங்கரவாத பயிற்சி மையங்கள் பாரத ராணுவத்தால் மிகத் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கோ, பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி தொடர்புடைய இடங்களுக்கோ எந்தச் சேதமும் விளையவில்லை. அதேசமயம், இத்தாக்குதலில் சுமார் 100 பாக். ஆதரவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, ஜெய்ஷ் − இ − -முகமது (ஜெ.இ.எம்) பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுப் (இவர் கந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடையவர்), அசாரின் மைத்துனர்கள் ஹபீஸ் முகமது ஜலீல், முகமது யூசுப் அசார் ஆகியோரும் ஜே.இ.எம் மற்றொரு பயங்கரவாதி முகமது ஹாஸன் கான், முரிட்கேவில் இருந்த லஷ்கர்- − இ − -தொய்பா தலைமையகத்தின் நிர்வாகிகள் முத்தசார் காதியன் கான், காலித் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் பதான்கோட் தாக்குதல், ஊரி தாக்குதல், பாரத நாடாளுமன்றம் மீதான தாக்குதல், மும்பை தாக்குதல் இவற்றில் தொடர்புடையவர்கள். மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேரும் இதில் பலியாகினர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாக். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதை உலகம் கண்டது. அதன்முலமாக, பாரத தாக்குதலில் 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதையும், பயங்கரவாதிகளுக்கு பாக். அரசு ஆதரவாக இருப்பதையும் உலகம் உணர்ந்து கொண்டது.
அடங்காத பாகிஸ்தானின் அத்துமீறல்:
பாரத ராணுவத்தின் இலக்கு மிகவும் தீர்க்கமானது. பஹல்காம் படுகொலைக்கு பழிவாங்கவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மிகவும் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால் பயங்கரவாதிகளை வழிநடத்திய பாக். ராணுவத்துக்கு அது அவமானமாகிப் போய்விடவே, பாரத- பாக். நடுவிலான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் தரைப்படையால் பீரங்கித் தாக்குதல் தொடுத்தது. மே 7-, 8 தேதிகளில் நிகழ்ந்த இந்த அத்துமீறல்களில் பாரதத் தரப்பில் வீரர்கள், குடிமக்கள் உள்பட 16 பேர் பலியாகினர். தவிர ஒரு சீக்கிய குருத்வாராவும், ஒரு சர்ச்சும் சேதமடைந்தன.
பாரதத்தின் முக்கியமான 15 நகரங்கள் மீது ட்ரோன்கள், சீன ஏவுகணைகளைக் கொண்டு தாக்கத் தொடங்கியது. அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லுதியானா, ஆதம்பூர், சண்டீகர், புஜ், பலோடி, உத்கர்லாய், நல், படிண்டா (இவை ஜம்மு-−காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் உள்ள நகரங்கள்) ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகள், ராணுவ மையங்களை நோக்கி இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், அந்த ட்ரோன்கள், சீன ஹெச்.கியூ. ஏவுகணைகள் அனைத்தையும் வெற்றிகரமாக வானிலேயே எதிர்கொண்டு நமது ஏவுகணை தடுப்பு சாதனங்கள் வீழ்த்தின. நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் இவ்வாறு வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தானின் எஃப்-16 விமானமும் (அமெரிக்கத் தயாரிப்பு), அவாக் (AWAC) விமானமும் வீழ்த்தப்பட்டன.
இந்த ஏவுகணைத் தடுப்புப் பணியில் பாரதத்தின் ஆகாஷ் ஏவுகணைகள், பராக்-8, எம்.ஆர் – எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகிய வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் முக்கியப் பங்கு வகித்தன. இவற்றில் ஸ்பைடர் மட்டுமே இஸ்ரேலியத் தயாரிப்பு. மற்றவை நமது பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பினால் (டி.ஆர்.டி.ஓ) வடிவமைக்கப்பட்டவை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல். இவை தவிர, ரஷ்யாவின் எஸ் 400 என்ற ஏவுகணைத் தடுப்பும் செயல்பாட்டில் இருந்தது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே முறியடித்த பாரத ராணுவத்தின் தீரம் கண்டு உலக நாடுகள் வியந்தன.
இதுவரை பாகிஸ்தான் மீது பாரதம் நேரடித் தாக்குதல் நடத்தவில்லை. பாரத நிலைகள் மீதான பாக். தாக்குதலை அடுத்து, பாரத ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதையடுத்து, பாக். நகரங்கள் மீது பாரத ராணுவமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது (ஆபரேஷன் சிந்தூர்-2). லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. ராவல்பிண்டி விளையாட்டு மைதானம் இதில் முழுவதும் சீர்குலைந்தது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலியத் தயாரிப்பான ஹார்பி ட்ரோன்கள் பெரும்பங்கு வகித்தன. லாகூரிலும் இஸ்லாமாபாத்திலும் முக்கியமான மையங்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக, பாக். பிரதமர் சபாஸ் ஷெரீப் பதுங்கு குழியில் ஓடி ஒளிய வேண்டியதாயிற்று.
இதனால் நிம்மதி இழந்த பாகிஸ்தான் அரசு, தனது நெருங்கிய நட்பு நாடான சீனா, துருக்கியிடமும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிடமும் உதவி கோரியது. அவர்கள் அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. அமெரிக்காவையும் பாகிஸ்தான் தலைவர்கள் நாடினர். ஆனால், அமெரிக்காவும் கைவிரித்தது. “இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை” என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அறிவித்தார் (மே 9).
உலக நாடுகளிடையே மரியாதையை இழந்த பாகிஸ்தான் மேலும் கண்மூடித்தனமாக 36 பாரத நகரங்களை நோக்கித் தாக்கத் தொடங்கியது. அந்த ஏவுகணைகள் அனைத்தும் நடுவானில் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக, பாரத நிலப்பரப்பில் பெரிய சேதம் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டது.
அதையடுத்து, அணுகுண்டு பயன்படுத்த பாகிஸ்தான் தயாரானது. அதுதொடர்பான பணிகள் நடக்கத் தொடங்கியவுடன் பாரத ராணுவம் முன்னெச்சரிக்கையாக, மேலும் பல பாக். படைத்தளங்களை மே10 இல் தாக்கியது (ஆபரேஷன் சிந்தூர்-3). அதிலும், அணு ஆயுதம் பதுக்கி வைத்துள்ள தளங்கள் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டு தாக்கப்பட்டன.
முதுகெலும்பை முறித்த பாரதம்:
ஆபரேஷன் சிந்தூர்-3 நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் முக்கியமான 11 விமானப்படைத் தளங்கள் மீது பாரதம் இலக்கு வைத்து 90 நிமிடங்கள் நடத்திய தாக்குதல்கள் பிராந்திய ராணுவ இயக்கவியலில் ஒரு தீர்க்கமான மாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளன. இந்த முன்னெச்சரிக்கை மற்றும் துல்லியமான தாக்குதல்கள் பாகிஸ்தானின் வான்பரப்பு மேலாண்மையைச் சீர்குலைத்துள்ளன.
பாரத விமானப்படையால் சிதைக்கப்பட்ட ஒவ்வொரு பாக். தளமும் ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்துவந்தன. இவற்றின் அழிவு பாகிஸ்தான் ராணுவத்தின் முதுகெலும்பையே முறித்துவிட்டது எனலாம்.
- நூர் கான் – சக்லாலா விமானப்படை தளம் (ராவல்பிண்டி), 2. பாகிஸ்தான் விமானப்படைத் தளம் ரஃபிகி (ஷோர்கோட்), 3. முரித் விமானப்படைத் தளம் (பஞ்சாப்), 4. சுக்கூர் விமானப்படைத் தளம் (சிந்து), 5. சியால்கோட் விமானப்படைத் தளம் (கிழக்கு பஞ்சாப்), 6. பஸ்ரூர் விமான தள ஓடுபாதை (பஞ்சாப்), 7. சுனியன் ரேடார் (கிழக்கு பஞ்சாப்), 8. சர்கோதா விமான தளம் (முஷாப்), 9 ஸ்கர்டு விமானப்படைத் தளம் (கில்கிட்-பால்டிஸ்தான்), 10. போலாரி விமானப்படைத் தளம் (கராச்சி அருகில்), 11. ஜகோபாபாத் விமானப்படைத் தளம் (சிந்து-பலோசிஸ்தான்) ஆகியவை தாக்கப்பட்ட முக்கியமான இலக்குகள்.
இவற்றில் நூர் கான் மீதான பாரதத்தின் தாக்குதல் பாகிஸ்தானின் வான் தளவாடங்கள் மற்றும் உயர் மட்ட ராணுவ ஒருங்கிணைப்பின் மையத்தைச் சீர்குலைத்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகில் உள்ள இத்தளம், விஐபி போக்குவரத்து மற்றும் ராணுவ தளவாடங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அடுத்து முன்னணி போர்ப் படைப்பிரிவுகளை வழங்கும் போர்த் தளமான ரஃபிகி செயல்பட முடியாததாக மாற்றப்பட்டது. அதன் விமான ஓடுபாதை, உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதால், பாகிஸ்தானின் திறன் கணிசமாக பலவீனமடைந்தது. முரித்தை குறிவைத்ததன் மூலம், பாரதம் ஒரு முக்கியமான ஏவுகணை சேமிப்பு மையத்தைச் சீர்குலைத்தது. சுக்கூர் விமானப்படைத் தளத்தை அழித்ததன் மூலம், பாகிஸ்தானின் தெற்கு வான்வழிப் பாதை துண்டிக்கப்பட்டது.
மோதலின் ஆரம்பத்திலேயே பாரத எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சியால்கோட் தாக்கப்பட்டது. மூன்றாம் கட்டத்தில் இது முற்றிலும் முடக்கப்பட்டது. அளவில் சிறியதாக இருந்தாலும், பஸ்ரூர் விமான நிலையம் அவசர விமான நடவடிக்கைகளில் முக்கியமானது. அதன் விமான ஓடுபாதை அழிக்கப்பட்டது. சுனியன் மீதான தாக்குதல்கள், மத்திய பாக். பஞ்சாபின் வான்வெளி கண்காணிப்புக்கு அவசியமான ரேடார் உள்கட்டமைப்பைச் சீர்குலைத்தன. இது பாரத விமானங்கள் தடையின்றி ஊடுருவ அனுமதித்தது.
சர்கோதா விமான தளத்தின் அழிவு முக்கியமானது. ராணுவத் தளபதிகள் பள்ளி, அணுசக்தி விநியோக தளம், உயரடுக்கு படைப்பிரிவுகள் இங்கு இருந்தன; இதன் அழிவு பாகிஸ்தானின் கட்டளை கட்டுப்பாட்டு கட்டமைப்பை முடக்கியது. கில்கிட் பகுதியில் உள்ள ஸ்கர்டுவில் ஏற்படுத்தப்பட்ட சேதம், இமயமலையில் சீன- பாகிஸ்தான் ஒருங்கிணைப்பைத் தடுத்தது. போலாரி விமானப்படைத் தளம் மீதான தாக்குதல், பாக். கடற்படைக்கு, அதிலும் கராச்சி துறைமுகத்துக்கு பெரும் சவாலாக அமைந்தது. ஜகோபாபாத் தளத்தில் ஏற்பட்ட சேதம், மேற்கு பாகிஸ்தானை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது.
ரேடார் வலைப் பின்னல்கள், ராணுவக் கட்டளை மையங்கள் தாக்கப்பட்டதால், பாக். ராணுவம் நிலைதடுமாறியது. இவை அனைத்தையும் விட, மிக முக்கியமான தாக்குதலையும் பாரத விமானப்படை நிகழ்த்தியதுதான் உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், சண்டை நிறுத்தத்திற்கும் அடிகோலியது.
அணு ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல்:
இந்தத் தாக்குதலில் முதன்மையானது இஸ்லாமாபாத் அருகில் உள்ள நூர்கான் படைத்தளம் மீதான தாக்குதல் ஆகும். இதன் அருகிலுள்ள கைரானா மலையைக் குடைந்து அதன் ஆழமான பகுதியில் பாக். அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதன் மீதான பாரத ஏவுகணைத் தாக்குதலை உலக நாடுகள் எதிர்பார்க்கவில்லை.
பாக். ராணுவம் பயங்கரவாதிகளின் கரங்களின் சிக்கியுள்ளது. அவர்கள் பாக். அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. எனவே, அரசு உத்தரவின்றி அவர்கள் பாரதத்தின் மீது அணுகுண்டுகளை ஏவ வாய்ப்பு இருந்தது. அதற்கான உளவுத் தகவல்களும் இருந்தன. எனவே, அதனை முறியடிக்க, கைர்னார் மலை முகாமின் நுழைவாயில் ‘பிரமோஸ்’ ஏவுகணையால் தாக்கப்பட்டது. அதன் விளைவாக அங்கிருந்த அணு ஆயுதம் ஒன்றில் கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது.
முன்னதாக அங்கு அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. அதன் விளைவாக இரு நிலநடுக்கங்கள் பதிவாகின. ரிக்டர் அளவுகோலில் 4.2 ரிக்டர் பதிவாகியது.
அதன் பிறகே, பாக். அரசு உலக நாடுகளிடம் கெஞ்சத் தொடங்கியது. அணு ஆயுதக் கசிவைத் தடுக்கும் தொழில்நுட்பம் இல்லாத பாகிஸ்தானின் அவல நிலையை உணர்ந்த அமெரிக்கா, பாரதத்திடம் பேசியது. அதன் விளைவாக, சூழ்நிலையை உணர்ந்து பாரதம் சண்டை நிறுத்தத்திற்கு சம்மதித்தது. அதுமட்டுமல்ல, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மே12 அன்று பேச்சு வார்த்ைத நடத்தப்பட்டது.
எனினும், “மீண்டும் ஒருமுறை பாரத மண்ணில் பயங்கரவாதிகள் அத்துமீறல் தாக்குதல் செய்தால் அது போர் நடவடிக்கையாகக் கருதப்படும். பாரதம் பதிலடி கொடுக்கும்” என்று திட்டவட்டமாக பாரத வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். “இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை” என்று பிரதமர் மோடியும் அறிவித்தார்.
இவ்வாறாக, நான்கே நாட்களில் மிகக் குறைந்த சேதாரத்துடன் பாரத முப்படைகள் நிகழ்த்திய தாக்குதல் உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. பாரதத் தரப்பில் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 10 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதே சமயம், எதிரி நாடு மிகக் கடுமையாக நாசம் அடைந்திருப்பதுடன், சீன தளவாடங்களின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.
பாரத நலனுக்கு ஊறு விளைவித்தால் என்னவாகும் என்று மிகவும் தெளிவான, உறுதியான பதிலடி மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. இது பங்களா தேஷுக்கும் சீனாவுக்கும் சொல்லாமல் சொன்ன பாடம். பாரத ராணுவத்தின் தீரமும், ஒருங்கிணைப்பும், ஜனநாயக அரசுக்குக் கட்டுப்பட்ட அதன் ஒழுங்குமுறையும், பாரத ஆயுதபலமும் இப்போது அனைவருக்கும் உணர்த்தப்பட்டிருக்கிறது. இது பயங்கரவாதிகளைக் கண்டு அஞ்சி மிரளும் முந்தைய பாரதம் அல்ல என்பது தற்போதைய அரசால் உலகின் கேளாச் செவிகளுக்கு உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், பாரதத்தின் இந்த ‘குங்குமத் திலகம்’ நடவடிக்கை, பாரத பிரஜை ஒவ்வொருவரும் நெற்றியில் தரித்த நறுந்திலகமாக மிளிர்கிறது.
கட்டுரையாளர்:சேக்கிழான்,
மூத்த பத்திரிகையாளர்