சிந்து நிதி நீர் ஒப்பந்தம் பாரதத்திற்கு பாதகம்

 

ஐம்மு -காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் – 22 அன்று சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாரத அரசு 65 ஆண்டுகளாக இருநாடுகள் இடையே இருந்து வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது.

சிந்து நதி திபெத்தில் உள்ள போகர் சூ என்ற பனிப்பாறைக்கு அருகில் உருவாகிறது. இந்த நதி பாரதத்தில் 800.75 கிலோ மீட்டர் நீளம் பாய்ந்தோடுகிறது.    இது வடக்கில் காரகோரம் மற்றும் ஹராமோஷ் மலைத்தொடர்களாலும், கிழக்கில் இமயமலை மேற்கில் சுலைமான் மற்றும் கீர்த்தர் மலைத்தொடர் தெற்கில் அரபிக் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இதன் முக்கிய துணை நதிகள் சட்லஜ், பியாஸ், ரவி, செனாப் ஜீலம் ஆகும். சிந்து நதி பாரதத்தின்  லடாக் யூனியன் பிரதேசம் வழியாக பாய்கிறது.

பாரதம் – பாகிஸ்தான் இடையே அமைதிக்கான ஒரு முக்கிய ஒப்பந்தமாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளது.  எனினும், பாரதத்திற்கு சில இழப்புகள் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. சிந்து, ஜீலம், செனாப் என பாரதத்தின் மேற்கு நதி நீரை  முழுமையாக பாரதம் பயன்படுத்த முடியாத நிலை. மேலும்,  மின் உற்பத்தி மற்றும் பெரிய அணைகளை பாரதம் கட்டுமானம் மேற்கொள்ள முடியாத அவலம். இந்த ஒப்பந்தம் ஜம்மு- காஷ்மீருக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இது வேளாண்மை மற்றும் தொழில்துறை வளர்ச்சியைத் தடுக்கிறது.

பாரதத்தின் பார்வையில் சிந்து நதியின் 80 % நீரை பாகிஸ்தானுக்கு ஒதுக்குவது நியாயமற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. பாரதத்தில்  அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உள்நாட்டு நீர் தேவைகளால் இந்தக் கருத்து வலுப்பெறுகிறது.

ஜம்மு – காஷ்மீரின்  70%  மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர்.  மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் குறைந்து வரும் நீர் விநியோகத்தால் ஜம்மு – காஷ்மீரின் இறையாண்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவே உள்ளது.

சுதந்திரத்துக்கு பின் 1954ல் ஜம்மு – காஷ்மீர் தன்னிறைவு பெற்றிருந்தது, ஆனால் இப்போது மத்திய நிதியை அம்மாநிலம் சார்ந்துள்ளது. இதற்கு IWT ஒப்பந்தம் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு தசாப்தங்களாக  ஜம்மு – காஷ்மீர் பாசனம் மற்றும் நீர்மின்சார வளர்ச்சியில் மிகக் குறைந்த முன்னேற்றத்தை மட்டுமே கண்டுள்ளது. விவசாய பாசனத்துக்கு 1.34 மில்லியன் ஏக்கருக்கு மட்டுமே நீரை பயன்படுத்த சிந்து நதியின் உடன்படிக்கை அனுமதிக்கிறது. இதனால் ஐம்மு- காஷ்மீரின் பொருளாதாரம் பின்தங்கிய நிலைக்கு செல்ல வழி வகுக்கிறது. இந்த ஒப்பந்தம்  ஐம்மு- காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாகவே இருந்து வருகிறது

பாரதத்தின் தேவைகளை மையமாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது சீரான வளர்ச்சிக்கு மற்றும் இருநாடுகளின் மத்தியில் அமைதியான சூழல் ஏற்பட வழி வகுக்கும்.