‘சித்த மருத்துவத்தை உலகளவில் கொண்டு செல்வது அவசியம்’

”சித்த ஓலைச்சுவடி மருத்துவத்தை உலகிற்கு கொண்டு செல்வது மருத்துவ மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை,” என, ஆயுஷ் அமைச்சக இணை செயலர் பாவனா சக்சேனா பேசினார். சென்னை, கலைவாணர் அரங்கில், சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் சார்பில், ‘தடுப்பு மற்றும் ஊக்குவிப்பு சுகாதார பாதுகாப்பில், சித்த மருத்துவத்தின் பண்டைய ஞானம்’ என்ற தலைப்பில், இரண்டு நாள் தேசிய மாநாடு நேற்று துவங்கியது.

இந்த மாநாட்டில், ஆயுஷ் அமைச்சக இணை செயலர் பாவனா சக்சேனா பேசியதாவது: பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தும் துறைகளில், ஆயுஷ் அமைச்சகமும் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால், இந்திய மருத்துவ முறையை உலகளவில் மேம்படுத்த பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

சித்தா மாணவர்கள் மற்றும் அறிஞர்கள், தங்கள் அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். பாரம்பரிய மருத்துவம், நம் அன்றாட வாழ்வில் இணைந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன், சித்தர்களால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி மருத்துவ முறைகளை, நாம் அனுபவிப்பது மட்டுமல்லாமல், உலகிற்கே கொண்டு செல்வது மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, மருத்துவ தாவரங்கள் குறித்த கண்காட்சியில், 200க்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.