சாத்தியமா? ஒரே தேசம், ஒரே தேர்தல்!

 

நாடாளுமன்ற தேர்தல், மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் சட்ட அமைச்சகம் இது தொடர்பாக கருத்துக் கேட்டது.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல்,  மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தத் தயார்; அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் நிதியும் கட்டமைப்பும் தேவை என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதுதான் வாக்காளர்களுக்கு வசதியானதாக இருக்கும் என்று கருதுகிறது. கடந்த டிசம்பர் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியும் இதே கருத்தைக் கூறியிருந்தார்.

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் ஆணையமும் ஒப்புதல் தெரிவித்திருப்பதால்  வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை எளிதில் ஆதரிக்காது.

ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் 2018 -ஆம் ஆண்டு முடிவடைகிறது. இதனால் இம்மாநிலங்களுக்கான தேர்தல் 2018ம் ஆண்டு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டும். அரசுக்கு வரும் கூடுதல் செலவுகளைக் கட்டுப்படுத்த, இம்மாநில சட்டசபைத் தேர்தல்களுடன் சேர்த்து 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடக்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தலையும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.மேலும், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்படுவதால், 7 மாநில சட்டசபைத்  தேர்தல்களையும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒன்றாகவே நடத்தி முடித்துவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2019 மே மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்ற  முன்னாள் செகரட்டரி ஜெனரல் காஷ்யப் தலைமையிலான உயர்மட்ட அரசு செயலாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டசபைத் தேர்தல்களை 6 மாத காலம் மட்டுமே முன்கூட்டி நடத்திக் கொள்ளலாம் என்று சட்டத்தில் விதிகள் உள்ளன. அதற்கு அந்த மாநில அரசுகள் ஒப்புக்கொண்டால் போதும் இதற்காக சட்ட திருத்தம் எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தி விடலாம் என்று காஷ்யப் கூறியுள்ளார்.

இதற்காக அந்தந்த மாநில அரசு,  எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளும் மாநில அரசுகளும் சம்மதித்தால் அந்த மாநில தேர்தல்களும் இதனோடு சேர்த்து நடத்தப்படும். இதனால் 7 மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் சேர்த்து ஒரே நேரத்தில்  2008 டிசம்பரில்  தேர்தல் நடைபெறலாம்.

அதேசமயம், எல்லா மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்துவதற்கு தற்போது வாய்ப்பு இல்லை. அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொள்ளவும் நூறு சதவீதம் வாய்ப்பில்லை. இதற்காக அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டி இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் அடிப்படைக் கண்ணோட்டமாக உள்ளது. சொல்லப்போனால் நேரு, இந்திரா போன்ற காங்கிரஸ் தலைவர்களும்கூட முற்காலத்தில் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக துணைப் பிரதமராக அத்வானி இருந்தபோது 2003ல் கருத்து வெளியிட்டார். அதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன என்பது நினைவுகூரத் தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலும் சட்டசபைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசின் செலவினத்தை மட்டுமல்லாது, கட்சிகளின் செலவையும் குறைக்கும். ஒரே நாடு – ஒரே தேர்தல்” என்ற நடைமுறை உருவாகுமானால், அது நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் வாய்ப்புண்டு. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களைக் கணக்கில் கொள்ளும் எதிர்க்கட்சிகள் பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த விடுமா என்பது சந்தேகமே.

வரப்போகும் நாட்களில் மத்திய அரசு இதுதொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் மத்திய அரசின் திட்டங்களால் அடுத்த ஆண்டு பாஜகவுக்கு ஏற்படும் உயர்வு அல்லது சரிவுகளும் தான் ஒரே பொதுத் தேர்தல் சாத்தியாமாகுமா என்பதை உறுதிப்படுத்தும்.

 

 

***************************************************************************************************************************

ஒரே சமயத்தில் தேர்தல்: ‘நீதி ஆயோக்’ ஆதரவு

வரும் 2024 முதல்  நாடு முழுவதும் லோக் சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே சமயத்தில்  நடத்த நீதி ஆயோக் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. மத்திய அரசுக்கு திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை அளித்துவரும் அமைப்பான நீதி ஆயோக் சமீபத்தில் அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் நலன் கருதி 2024 முதல் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் லோக் சபா, சட்ட சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்; இந்த தேர்தல்களை இரு கட்டமாக நடத்தலாம். இதை நிறைவேற்ற, ஒரு சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களை முன் கூட்டியோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ  நடத்தப்பட வேண்டியிருக்கும். தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவதற்கான வழி வகைகளை ஆராய அரசு அதிகாரிகள், நிபுணர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க நடைமுறையை உருவாக்கி, தேவையான சட்ட திருத்த மசோதா தயாரித்து நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சமயத்தில் லோக் சபா, சட்டசபைத் தேர்தல்களை என பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுத்து வருகிறார். அதே கருத்தை, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அந்த கருத்துக்கு நீதி ஆயோக் அமைப்பும் வலு சேர்த்துள்ளது.

(தினமலர்)

***************************************************************************************************************************