சாதாரண் வந்தே பாரத் ரயில் 130 கி.மீ., வேகத்தில் சோதனை

‘சாதாரண் வந்தே பாரத்’ ரயிலை, சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட சாதாரண் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளன. இந்த ரயிலை, இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரயில், சென்னை கடற்கரை – அரக்கோணம் இடையே நேற்று, மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ரயிலின் வேகம், ரயில் பாதை திறன் மற்றும் சிக்னல் தொழில்நுட்பம், கி.மீ., கடக்கும் நேரம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளை கடந்து செல்வது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர். ரயில்வே வாரிய அதிகாரிகள் நாளை, இந்த ரயிலில் ஆய்வு நடத்த உள்ளனர். எந்த மார்க்கத்தில் சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்ற விபரம் விரைவில் வெளியாகும்.