சர்க்கரைக்கு மாற்று சீனித் துளசி

ஒரு கிராமத்தில் உள்ள டீக்கடையே அவ்வூர் மக்களின் பிரதான நுழைவு வாயில். நகரங்களில் ஒவ்வொரு தெருமுனைகளிலும் டீக்கடைகளே சுவை காவலர்களாக பேசப்படுவார்கள். அதுவும் ஒரு கிளாஸ் டீ குடித்துக் கொண்டே பேசும் உற்சாகம் சொல்லி மாளாது.

காபி, டீ, பால் எது சொல்லும் போதும், அண்ணே..! ரெண்டு காபியில ஒண்ணு சீனி வேண்டாம்!” அல்லது மாஸ்டர் ஒண்ணுல ஹாப் சுகர்” என்று எச்சரிக்கையோடு சொல்லுபவர் குரல்களே ஓங்கி ஒலிக்கிறது. காரணம் தனக்கு சுகர் இருக்கு என்பதுதான். இதற்கு என்னதான் தீர்வு? கேள்விகளுக்கிடையே சர்க்கரை நோய் பிடியிலிருந்து கட்டுப்படுத்திக் கொள்ளவும், சற்றே விலகிக் கொள்ளவும், ஒரு ஆறுதல் செய்தி!

மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஜி. முத்துகிருஷ்ணன், 30, சீனிக்கு மாற்று சீனி என்ற வகையில் ஒரு மருத்துவத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆம்.  நாம் பயன்படுத்தும் சீனிக்கு பதில் சீனித்துளசி (Stevia)யிலிருந்து  தயாரிக்கப்பட்ட டீ தூளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இது எப்படியிருக்கும்? ரயில்வே ஸ்டேஷனில் ஒரு கப்பில் பால், அதனுடன் ஒரு டீ பையும் போட்டுத் தருவார்களே, அதைப்போலதான். இந்த ரெடிமேட் டீ தூள் வாங்கி பாலில் (சீனி சேர்க்காமலே) முக்கி நனைத்து எடுத்து டீயாக குடிக்கலாம். ஏனெனில், நார்மல் டீ தூளுடன் சீனித் துளசி பதப்படுத்தி பொடியாக சேர்க்கப்பட்டுள்ளதால் தேவையான இனிப்பும் இருக்கும்.  உற்சாகமும் குறையாது.

சீனித் துளசி பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால், துளசியில் வெண் துளசி, கருந்துளசி, துருத்ரிகா துளசி, ராமர் துளசி, காட்டுத் துளசி என வகைகள் உள்ளன. ஒவ்வொரு துளசிக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. அதைப் போலவே, சீனித் துளசிக்கும் மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சீனித்துளசி தென் அமெரிக்கா, வட அமெரிக்கா இடையே இருக்கும் பராகுவே நாட்டைத் தாயகமாக கொண்டது. அங்கு பல்லாண்டுகளாகவே சீனித் துளசியை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சீனா, ஜப்பான், துருக்கி போன்ற நாடுகளில் மக்கள் மிகப்பெரிய அளவில் உபயோகிக்கிறார்கள். மேற்கண்ட நாடுகளில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளில் சீனித் துளசியைப் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள்.

ஐரோப்பிய உணவு கட்டுப்பாட்டு வாரியத்தின் வல்லுநர்களின் பரிந்துரைப்படி, சீனித் துளசியை சிறுவர் முதல் பெரியவர் வரை (அதாவது சீனிக்கு மாற்றாக) சாப்பிடலாம். மேலும், சர்க்கரை நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் கொண்டவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.  உலகின் முன்னணி உணவு சார்ந்த நிறுவனங்களான WHO – SWISS, USFDA – USA, EFSA – GERMANY அனுமதியும் அங்கீகாரமும் பெற்றது. அத்துடன் இந்தியாவிலும் FSSAI – INDIA சீனித்துளசி, அங்கீகரிக்கப்பட்டதற்கான  சான்றுகள் உள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்று இந்த சீனித் துளசி. சீனித் துளசியிலிருந்து தயாரிக்கப்படும் சீனி மற்றும் ரெடிமேடு டீதூள் பற்றியும் ஜி. முத்துகிருஷ்ணன் கூறியதாவது:

நான் படித்து முடித்தவுடன் சொந்தமாக தொழில் பண்ணனும்னு நினைச்சு 2013ல் ஒரு ஏற்றுமதி பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்ன ஏற்றுமதி பண்ணப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, மூலிகை ஏற்றுமதி பண்ணலாம்னு இருக்கேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதற்கான தேடுதல், அதனால் ஏற்பட்ட பல கட்ட போராட்டங்கள், ஐந்து வருட உழைப்பில் சீனித்துளசியைக் கண்டுபிடித்தேன். அதையே தொழிலாக்கிக் கொண்டேன். சீனித் துளசியை பல்வேறு நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் வட மாநிலங்கள் முழுவதும் சீனித் துளசியை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நல்ல லாபம் சம்பாதிக்கிறார்கள். மக்களும் காபி, டீ, பால் மட்டுமல்லாது ஸ்வீட்ஸ்லேயும் நம்ம ஊர் சீனிக்கு பதில் சீனித் துளசியிலிருந்து கிடைக்கும் இனிப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 43 டிகிரி வெயில் அடித்தாலும் சீனித் துளசியைப் பயிரிட முடியும். ஆனால், நம்ம ஊரில் விவசாயிகள் பயிரிட முடியவில்லை என்கிறார்கள். ஒரு வேளை பயிரிட்டாலும் அதற்கான ஈடு கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

கோவை, பொள்ளாச்சி, மதுரை கருப்பாயூரணி பகுதிகளில் பயிரிடப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் சரியான லாபம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் சொல்லும்போது அவர்கள் இதில் கவனம் செலுத்த விருப்பமில்லையோ எனத் தோன்றுகிறது. அதேசமயம் சீனித் துளசியைப் பற்றி போதிய விழிப்புணர்வும் இல்லை என்றே தெரிகிறது. சீனித் துளசியை விவசாயம் செய்வதற்கும் விவசாயம் செய்ததைத் திரும்ப கொள்முதல் பண்ணுவதற்கும் என்னால் உதவ முடியும். மேலும் சீனித் துளசியை செடியாகவும் இலையாகவும் விதையாகவும் வாங்கித்தர முடியும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தர தயாராக உள்ளேன். எதிர்காலத்தில் சீனித் துளசி பயன்பாட்டை மிகப் பெரிய வர்த்தக மயமாக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2015ல் “Make a Foods” என்ற பெயரில் இத்தொழில் ஆரம்பித்தேன். டீக்கு பயன்படுத்தும் டீத்தூள், சீனித் துளசியைப் பதப்படுத்தப்பட்டு பவுடராக்கி ரெடிமேடாக சிறிய டீ தூள் பையாக தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். இதை வெந்நீரில் கலந்து ப்ளாக் டீயாகவும் குடிக்கலாம். அல்லது பாலில் கலந்து நார்மல் டீயாகவும் குடிக்கலாம். நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் அதிக கலோரிகள் உள்ளன. இதில் 0% கலோரி தான். நாம் எதற்கெல்லாம் கரும்பிலிருந்து கிடைக்கும் சீனி பயன்படுத்துகிறோமோ அதற்கெல்லாம் சீனித் துளசியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(சீனித்துளசி கலந்த தேயிலையை வாங்க 96299 65488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.)    தி