சம்பந்தமே இல்லாத விளம்பரம்

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பரதத்தில் முதல்முறையாக நடைபெறவுள்ளது. இது தமிழகத்தின் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வரும் 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதிவரை நடைபெற உள்ளது என்பது சிறப்பு. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி ஒலிம்பியாட் போட்டியின் தீப தொடர் ஓட்டத்தை பாரதப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தீபம் பாரதத்தின் 26 மாநிலங்களில் உள்ள முக்கியமான 75 நகரங்கள் வழியாக பயணித்து மாமல்லபுரத்திற்கு வந்தடையவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க 28ம் தேதி சென்னை வருகிறார். இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த வீடியோ ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஆனால், அந்த வீடியோவில் செஸ் விளையாட்டின் மூலம் நமது நாட்டுக்கு பெருமைச் சேர்த்த தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா போன்றோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க அரசின் இந்த சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கண்டித்துள்ளார். செஸ் விளையாட்டு வீரர்களையே காட்டாத, செஸ் விளையாட்டுப்போட்டி என்ற பெயரில் வெளியான தங்களது சுய விளம்பரமாகவே இது உள்ளது, இது அரசு வெளியிட்டுள்ள விளம்பரமாக அல்ல, தி.மு.க விளம்பரமாகவே தெரிகிறது, செஸ் விளையாட்டு வீரர்களே இல்லாத இந்த விளம்பரத்தில் ஏ.ஆர் ரஹ்மான் எதற்கு? என இணையதளவாசிகளும் கிண்டல் செய்து வருகின்றனர்.