சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை பாரதீய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் தீர்ப்பினை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பலபெண்கள்போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வறு தரப்பினரால் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர்களை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் உள்ளிட்ட மதத்தின் அடிப்படையிலான நடை முறைகள் பற்றி இந்த அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும்.7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.
இந்த நிலையில், கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதை மீறி தரிசனத்துக்கு வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. பெண்கள் மலை ஏற அரசு எப்போதுமே உடந்தையாக இருந்தது இல்லை. தனிப்பட்ட முறையில் மலை ஏற வரும் பெண்கள் நீதிமன்றத்தின் உத்தரவுடன் வரவேண்டும்.
தனிப்பட்ட முறையில் விளம்பரத்திற்காக திருப்தி தேசாய் போன்ற சிலர் தரிசனத்திற்கு வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற செயல்களை கேரள அரசு ஒரு போதும் ஆதரிக்காது. சபரிமலை புனிதமான இடம். இங்கு தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளுக்கு இடம் இல்லை. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்தலாம். பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்கவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
திருவனந்தபுரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்க தேவை இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.கேரள சட்டத்துறை மந்திரி பாலன் கூறுகையில், சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பெண்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“சபரிமலையில் இந்த ஆண்டு பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. எனவே கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட மாட்டாது. சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பெண்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை” என்று கூறப்பட்டு உள்ளது.