சந்தேஷ்காலி போராட்டத்துக்கு தலைமை ஏற்ற பெண் பாஜக வேட்பாளரானார்!

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான். இங்கு இவரும் இவரது ஆதரவாளர்களும் வைத்ததுதான் சட்டம். இங்குள்ள பழங்குடியினரை மிரட்டி அவர்களின் நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். நிலம் தர மறுப்பவர்களின் நிலங்களில் கடல் நீரை லாரியில் கொண்டு வந்து பாய்ச்சுவர்.

ரேஷன் கடைக்கு வரும் பொருட்களை எல்லாம் மக்களுக்கு விநியோகிக்காமல் கடத்தி வந்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்களை தங்கள் கட்சி அலுவலகத்துக்கு இரவு நேரங்களில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்தாலும் எடுபடாது. ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் ரேகா பத்ரா என்ற பெண், சந்தேஷ்காலி கிராமத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். இந்த போராட்டம் நாட்டையே அதிர்ச்சியடைச் செய்தது. இதையடுத்து ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமறைவாகினர். கொல்கத்தா உயர் நீதிமன்றம் கெடு விதித்தால், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆட்களை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஷேக் ஷாஜகான் திரிணமூல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி மேற்குவங்கம் சென்றிருந்தபோது, சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்த போராட்டத்தை நடத்திய ரேகா பத்ராவும் சென்று, சந்தேஷ்காலியில் நடந்த கொடூரங்களை பிரதமரிடம் எடுத்துரைத்தார். சந்தேஷ்காலி கிராமம் பஷீர்ஹட் மக்களவைத்தொகுதிக்குள் வருகிறது.

பாஜக கடந்த ஞாயிற்று கிழமை 111 வேட்பாளர்கள் அடங்கிய 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் மேற்குவங்கத்தில் போட்டியிடும் 19 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதில் பஷீர்ஹட் தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து ரேகா பத்ரா கூறுகையில், ‘‘மக்களவைத் தேர்தலில் பஷீர்ஹட் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் குரல் எழுப்புவேன்’’ என்றார்.

பஷீர்ஹட் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக எம்.பி நுஷ்ரத் ஜஹான் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வாபஸ் பெறப்பட்டு நூருல் இஸ்லாம் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.

பஷீர்ஹட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரேகா பத்ராவிடம் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்றும் அவரிடம் மோடி கேட்டறிந்தார். சக்தியின் ஸ்வரூபமே நீதாம்மா என்று ரேகாவிடம் கூறிய மோடி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.