சந்தேஷ்காலி கலவரம்: உண்மை கண்டறியும் குழுவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலிக்குச் செல்ல, ஓய்வுபெற்ற பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினருக்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியில், ஆளும் திரிணமுல் காங்., நிர்வாகி ஷாஜஹான் ஷேக், அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு எதிராகவும், ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யக் கோரியும், அப்பகுதி மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 நாட்களுக்கு மேல், அவர் தலைமறைவாக உள்ளார்.

ஷாஜஹான் ஷேக்கை கைது செய்யும்படி கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம், முதல்வர் மம்தா அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், சுதந்திரமாக செயல்படும், ஓய்வுபெற்ற பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவினர், சந்தேஷ்காலிக்குச் செல்ல முயன்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பின் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதையடுத்து, சந்தேஷ்காலிக்குச் செல்ல அனுமதி அளிக்கக் கோரி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், உண்மை கண்டறியும் குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், சந்தேஷ்காலிக்கு உண்மை கண்டறியும் குழுவினர் செல்ல அனுமதி வழங்கியது. இந்தக் குழுவினர், நாளை செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கிய குற்ற வாளியான ஷாஜஹான் ஷேக்கை, சி.பி.ஐ., அல்லது அமலாக்கத் துறை அல்லது மாநில காவல் துறை என, யார் வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதற்கிடையே, ஆளும் திரிணமுல் காங்கிரசின் கட்டுப்பாட்டில், ஷாஜஹான் ஷேக் பாதுகாப்பாக இருப்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார். ஆனால் இதை, திரிணமுல் காங்., மறுத்துள்ளது.