குழந்தைகள் வளர்ப்பில் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாம் சொல்வதை குழந்தைகள் அப்படியே கேட்க மாட்டார்கள். ஆனால், நாம் நடந்து கொள்வதை குழந்தைகள் பார்க்கிறார்கள். எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு முன் உதாரணங்களாக செயல்பட வேண்டும்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நூற்றாண்டை கடந்து, எழுச்சி நடை போடுகிறது. இத்தருணத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் பாரதம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்தார். டிசம்பர் 9 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி திருச்சியிலும் சாதனையாளர்கள், அறிவு ஜீவிகள், இளம் தொழில் முனைவோர் ஆகியோர் அடங்கிய அவையில் உரையாற்றினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சென்னை கூட்டத்தில் டாக்டர் மோகன் பாகவத் சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றினார். அவர் பேசியதாவது :
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தை 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நாக்பூரில் டாக்டர் ஹெட்கேவார் தொடங்கினார். அவர், சிறுவயதில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார். தனது 11 வயதில் ஒரே நாளில் தாயையும், தந்தையையும் இழந்து விட்டார். அவர் விடாமுயற்சியுடன் கல்வி கற்றார். மருத்துவத்தில் பட்டம் பெற்று டாக்டர் ஆனார். ஆனால், அவர் டாக்டராக பணியாற்றவில்லை. தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அவர் அர்ப்பணித்து விட்டார்.

பால கங்காதர திலகர், காந்தி, பகத் சிங், போன்றோரின் செயல்பாடுகளை எல்லாம் டாக்டர் ஹெட்கேவார் உன்னிப்பாக கவனித்தார். அவர்களது செயல்பாடுகளை மனத்தில் பதித்துக் கொண்டார். அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைக்கு பிரம்மச்சரியம் அவசியம் என்பதால் அதை அவர் கடைப்பிடித்தார். சுதந்திரமும், சமத்துவமும் ஒற்றுமை இருந்தால் தான் சாத்தியமாகும். ஒற்றுமை இல்லாவிட்டால், அரசியல் சாசனத்தால் கூட, நம்மை காப்பாற்ற முடியாது என்று அவர் கூறினார்.
தனிநபர்களும், சமூகமும், சமூக கட்டமைப்பும் தேச பக்தியுடன் இயங்க வேண்டும். மேலும், நேர்மையும், தன்னலமின்மையும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் சிலர் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற வியாதிகளுடன் ஒப்பிட்டு பேசினர். இது அபத்தமானது, இந்த நாடே ஹிந்து தேசம், ஹிந்து என்றாலும், பாரதியம் என்றாலும் ஒன்றுதான். வேற்றுமை மேலோட்டமானது, தற்காலிகமானது, ஒற்றுமை ஆழமானது, முழுமையானது, நிரந்தரமானது.
நம்மிடமிருந்து வேறுபடுபவர்களையும், அரவணைத்து செயல்பட வேண்டும். சுயநம்பிக்கை உடையவர்களுக்கே கடவுளும் உதவ முன்வருகிறார். எதற்கெடுத்தாலும், அரசின் உதவியை சார்ந்திருக்கக் கூடாது. இதனை ஸ்வயம் சேவகர்கள் முன்னுதாரணமாக திகழ்ந்து, தேசத்திற்கு எடுத்துரைத்து வருகிறார்கள். தர்மம் என்பது வெறும் வழிபாடு அல்ல, அது மக்களை ஒற்றுமைப்படுத்துகிறது, உயர்ந்தோங்க வைக்கிறது.
சமூக மாற்றம் தன்னால்தான் ஏற்பட்டது என்று ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் சொன்னதில்லை. இந்த மாற்றத்திற்கு சமூகமே உரிமை கொண்டாட வேண்டும்.
குழந்தைகள் வளர்ப்பில் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாம் சொல்வதை குழந்தைகள் அப்படியே கேட்க மாட்டார்கள். ஆனால், நாம் நடந்து கொள்வதை குழந்தைகள் பார்க்கிறார்கள். எனவே, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு முன் உதாரணங்களாக செயல்பட வேண்டும்.

அனைவரையும் ஒருங்கிணைத்து ஓர் அணியாக செயல்பட வேண்டும். பாரதத்துக்காக உழைப்பதும், சங்கத்துக்காக உழைப்பதும் ஒன்றுதான். பல்வேறு இடர்பாடுகளை சங்கம் எதிர் கொண்டுள்ளது. முன்பெல்லாம் நமக்கு பொருளாதார ஆதரவு கிடையாது, ஊடக பலமும் கிடையாது, ஆங்கிலேயர்கள் நமது சங்கத்தை சிறுமைப்படுத்தி வந்தார்கள். இவ்வளவு இடர்பாடுகளையும், கடந்து சங்கம் முன்னேறியுள்ளது. சமூகத்தை முன்னேற்றியுள்ளது.
பல ஸ்வயம்சேவகர்கள் தாக்கப்பட்டுள்ளனர், படுகொலை செய்யப்பட்டுள்ளனர், சோதனைகளை எல்லாம் சங்கம் சாதனைகள் ஆக்கியுள்ளது. சங்கத்தை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 10,000 பேர் வசிக்கும் இடங்களில் எல்லாம் ஷாகா நடைபெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூறியதை இங்கு நினைவுப்படுத்துகிறேன். ‘’நம்மிடமிருந்த பிளவுகளால்தான் அந்நியர்கள் நம்மை தோல்வியடைய வைத்தார்கள், தேசத்தை ஆக்கிரமித்தார்கள், சகோதரத்துவம் இல்லை என்றால் சுதந்திரமும், சமத்துவமும், அர்த்தமற்று போய்விடும்’’. இதன் அடிப்படையில்தான் டாக்டர் ஹெட்கேவார் தொடர்ந்து பணியாற்றினார்.
ஹிந்துக்களை நான்கு வகையினராக பிரிக்கலாம். நாம் ஹிந்துக்கள் என்பதுடன் இதில் பெருமிதமும் கொள்பவர்கள் முதல்வகையினர். நாம் ஹிந்துக்கள்தான் ஆனால் இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்பவர்கள் இரண்டாம் வகையினர். நாம் ஹிந்துக்கள்தான் ஆனால், உரக்க சொல்ல வேண்டியதில்லை என்பவர்கள் மூன்றாம் வகையினர். தாங்கள் ஹிந்துக்கள் என்பதை மறந்து விட்டவர்கள் அல்லது மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் நான்கவது வகையினர்.

ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தை கட்டமைக்கும் பணியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஐந்து முக்கிய அம்சங்களை சங்கம் வற்புறுத்தி வருகிறது. சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழலை பேணுதல், சுய அடையாளம், குடும்ப விழுமியங்கள், குடிமகன் கடமைகள் ஆகிய இந்த ஐந்து அம்சங்களையும் கடைப்பிடித்து, தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகத்தின் பிரதான இலக்கு தேச மேம்பாடே, அரசியல் அதிகாரம் அல்ல.
தமிழ்நாடு தேசிய உணர்வு கொண்ட பூமிதான். இதை மேலும் வலுப்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் போது தாய் மொழியிலேயே பேச வேண்டும். பாரத மொழிகள் யாவும் தேச மொழிகளே. நாம் எங்கு வாழ்கிறோமோ, அந்தப் பகுதியில் பேசப்படும் மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அங்குள்ள மக்களுடன் கலந்து பழக வேண்டும். தாய் மொழியிலேயே கையொப்பம் இட வேண்டும்.
நமது சுய அடையாளத்தை தக்க வைத்து கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும். நான் ஹிந்து என்று கூறினால், அதற்கு நான் முஸ்லிம் விரோதி என்று பொருள் அல்ல. சங்கத்தின் பணியை தெரிந்துக்கொள்ள விரும்புவர்கள் ஷாகாவிற்கு வாருங்கள். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. சங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்கள் ஸ்வயம்சேவகர்களே. ஏனெனில் பாரதத்திற்காக உழைப்பவர்கள்சங்கத்திற்காக உழைப்பவர்களே. எதிர்கால உலகம் பாரதத்தை நம்பிக்கையுடன் எதிர் நோக்குகிறது. பாரதம் விஷ்வகுருவாக உயர்ந்தோங்கும். இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டியப் பொறுப்பு, நம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதனை உணர்ந்துக் கொண்டு, இதன் அடிப்படையில் செயல்படுவோம். இவ்வாறு டாக்டர் மோகன் பாகவத் பேசினார்.
உரையை தொடர்ந்து அவையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு விஷயங்களுக்கு டாக்டர் மோகன் பாகவத் விளக்கம் அளித்தார். அதன் சாராம்சம் பின்வருமாறு :
சங்கம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரானது அல்ல. ஆனால் அதே நேரத்தில் தொழில் நுட்பத்தால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. இதனால்தான் வீட்டிற்கு வீடு செல்ல வேண்டும். நேருக்கு நேர் கலந்துரையாட வேண்டும் என்று கூறுகிறோம். ஹிந்துத்துவம் என்பது கோட்பாடு, ஆர்.எஸ்.எஸ் என்பது செயல்முறை விளக்கம். இதற்கான திறவுகோல் ஷாகா. 18 கோடி குடும்பங்களை தொடர்புக் கொண்டுள்ளோம். இதன்மூலம் மக்களிடையே ஹிந்துத்துவ விழுமியங்களை கொண்டு சேர்த்துள்ளோம்.
சங்கத்திற்கு இணையாக வேறு எந்த அமைப்பையும் குறிப்பிட முடியாது. கடந்த 200 ஆண்டுகால வரலாற்றை பார்த்தால், சங்கம் தனித்துவத்துடன் விளங்குவதை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத், சேவா பாரதி ஆகியவற்றின் கோணத்தில் சங்கத்தை பார்க்கவேண்டாம். சங்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஷாகாவிற்கு நேரில் வாருங்கள்.
பக்தர்கள் வசமே கோயில் நிர்வாகம்
கோயில் நிர்வாகம் குறித்து டாக்டர் மோகன் பாகவத் கூறியதாவது : அரசின் பிடியில் இருந்து ஆலய நிர்வாகம் விடுவிக்கப்பட வேண்டும், என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடம் இல்லை. பக்தர்களின் வசதிக்காகவே கோயில் நிதி செலவிடப்பட வேண்டும். இதை நீதிமன்றமும் எடுத்துரைத்துள்ளது. அரசு நடத்தும் கோயில்களை விட, அறக்கட்டளை நடத்தும் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன. கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக விரிவாக கலந்து பேசி, ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம்.
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில்: அடவி வணங்கி