சகோதரி நிவேதிதை ஆற்றிய தொண்டுகள்

 

இன்று நிவேதிதை என அனைவராலும் அறியப்படும்

மார்கரெட் எலிசபெத் நோபிள் சாமுவேல் – மேரி நோபிள் தம்பதியினருக்கு 1867 அக்டோபர் 28 அன்று அயர்லாந்து நாட்டில் டங்கன்னன் என்ற சிற்றூரில் பிறந்தார்.

ஆசிரியையாகப்  பணியாற்றி அதில் பல புதுமைகளை புகட்டினார். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை கேட்டு, அவரின் சிஷ்யையாக ஆனார். பின் பாரதத்திடமிருந்து ஆன்மிகத்தை கற்கவும் பாரதத்துக்கு சேவை செய்யவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அதிலும் குறிப்பாக பாரதப் பெண்கள்  கல்வி பெறுவதிலும் முன்னேற்றத்திலும் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சகோதரி நிவேதிதை ஒரு சராசரி இந்தியனைவிட இந்த தேசத்தின் மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார்.

கற்பிப்பதற்கான செயல்முறை திட்டம்

பாரதத்திற்கு நிவேதிதை வந்ததன் முக்கிய நோக்கம் கற்பிப்பது. அதில் சுவாமி விவேகானந்தர், படிப்படியாக தொண்டு செய்யவே வந்துள்ளதையும் மற்றவர்களைவிடப் பெரிய அறிவாளிகள் என்றோ, அவர்களை கைதூக்கி விடும் உயர்ந்தோராகவோ நினைத்துக் கொள்ளாதிருப்பதன் அவசியத்தைப் புகட்டினார். மேலும் தொண்டு செய்ய வேண்டியிருக்கும் மக்களை அறிந்திருப்பதன் அவசியத்தையும் மேற்கத்திய கருத்துக்களை திணிக்காதிருப்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.

கல்விப் பணி

நவம்பர் 13, 1898ல் எண் 16, போஸ்பாரா தெருவில், அமைந்துள்ள வீட்டில் பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்டது. காளி பூஜையன்று அன்னை சாரதா தேவி பள்ளியைத் திறந்து வைத்தார். ‘அன்னையின் ஆசியை விட வேறு நல்ல சகுனத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் சிறந்து விளங்கப்போகும் படித்த பெண்ணினத்திற்கு இதைவிட நல்ல சகுனம் ஏதும் இருக்க முடியாது’ என்று தமது கடிதத்தில் எழுதுகிறார் நிவேதிதை.

இப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல்,தையல் முதலானவையும் சொல்லித் தந்தார். அதன்பின் சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தரும் பிரிவு சகோதரி கிறிஸ்டைன் துணையுடன் ஆரம்பித்தார்.

பள்ளி நடத்துவதற்கான செலவை புத்தகம் எழுதி, அதில் வரும் தொகையைக் கொண்டு சமாளித்தார். இங்கிலாந்து, அமெரிக்க நண்பர்களும் உதவினர். மிசல் புல் என்பவர் பெருமளவு உதவினார்.

நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அன்னை சாரதா தேவி இப்பள்ளி தொடர்ந்து நடைபெறச் செய்தார்.

நிதி திரட்டும் பணி

புதிய முறைகளைப் பின்பற்றி நிவேதிதை துவக்கிய பள்ளி சோதனையளவில் இருந்ததால் அதனை வளர்க்க நிதி உதவி வேண்டி, இங்கிலாந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. சுவாமி விவேகானந்தரும் அப்போது மேற்கத்திய நாடு செல்வதாக இருந்ததால், அவருடன் 1899 ஜூன் மாதத்தில்  புறப்பட்டார்.

அமெரிக்காவிலும் தனது பள்ளிக்காக நன்கொடை திரட்டினார். அமெரிக்கப் பெண்களிடம் பாரதியப் பெண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வு தகவல்கள் இல்லை என்பதை உணர்ந்தார்.  அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் மிஷனரிகளால் பாரதத்தைப் பற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றியும் பல தவறான எதிரான தகவல்கள் பெருமளவில் பரப்பப்பட்டிருந்தது. அந்நிலையில் பாரதப் பெண் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கு நிதி திரட்டுவது என்பது மிகச் சிரமமான காரியமாகவே இருந்தது. பெரிய அளவில் உரையாற்றி உண்மையான நிலையை தெரியப்படுத்துவது என்பது தேவையான ஒன்றாயிற்று.

‘நியூயார்க்கில் ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்’ அமைப்பை நிறுவி, ‘ராமகிருஷ்ணர் பெண்கள் பள்ளிக்கான திட்டம்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமும் வெளியிட்டார். பாரதியப் பெண்களின் உள்ளத் தூய்மையைப் பற்றியும் சாந்தமான இயல்பு பற்றியும் பேசினார். இவற்றின் மூலம் அமெரிக்கப் பெண்கள் பாரதியர்களின் வாழ்க்கையைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.

லண்டன் பத்திரிகை நிருபர் ஒருவர் நிவேதிதையை ‘இந்திய நாட்டிற்காகத் தொண்டாற்றும் வீராங்கனை’ என்று குறிப்பிட்டார்.