கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன்(54) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
இவர், கடந்த 2016-ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இருவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1995-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த ரா.செல்வக்கண்ணன், கடந்த 2002-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். கடந்த 2005-ம் ஆண்டு க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு, செயல்வழிக் கற்றல் முறையை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக செயல்வழிக்கற்றல் மாதிரிப் பள்ளி என்ற சிறப்பும், ரூ.25,000 சிறப்பு நிதியும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமாக இப்பள்ளிக்கு கடந்த 2006-ம் ஆண்டு 2 கணினிகள் வழங்கப்பட்டன. கொடையாளர்கள் மூலம் மேலும் 7 கணினிகள் பெறப்பட்டு, 9 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் பள்ளியில் அமைக்கப்பட்டு அனைத்து கணினிகளும் இணையதள வசதியுடன் செயல்படுத்தப்பட்டன. 2006-ம் ஆண்டில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் முதன்முதலாக கணினி ஆய்வகம் அமைக்கப்பட்ட பள்ளி இதுதான்.
இதைத்தொடர்ந்து, சிறப்பான செயல்பாட்டுக்காக 2008-ம் ஆண்டு மாவட்ட அளவில் சிறந்த கணினி வழிக் கற்றல் மையத்துக்கான விருது வழங்கப்பட்டது.
ரா.செல்வக்கண்ணனின் சீரிய முயற்சியால் பள்ளிக்குள் நுழையும்போதே இதமான மனநிலையை உருவாக்கும் விதமான மரங்கள், செடிகள் என பசுமையான வளாகமாக பள்ளி வளாகம் மாற்றப்பட்டது. ஸ்மார்ட் வகுப்பறை, டிஜிட்டல் மல்டி மீடியா வகுப்பறை, அபாகஸ், டேப்லட் வாயிலாக கல்விசார் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கற்பித்தல், வண்ணப்படங்கள் வரையப்பட்ட வகுப்பறைகள் என தனியார் பள்ளிகளை விஞ்சும் விதமாக இப்பள்ளி மாறியது.
அனைத்து வகுப்பறைக்கும் டைல்ஸ் பதிக்கப்பட்டு மின்விசிறி, தனித்தனி தொலைக்காட்சிப் பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நன்கு பராமரிக்கப்படும் கழிப்பறைகள், கைகழுவ பீங்கான் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்
சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி, இசை (கீ போர்டு, வாய்ப்பாட்டு), நடனம் (மேற்கத்திய மற்றும் கிராமியம்), கராத்தே, யோகா, ஓவியம், கேரம், செஸ், பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் இங்கு கற்றுத்தரப்படுகின்றன.
ஒவ்வொருவரின் தனித்திறனை அடையாளம் கண்டு ஊக்குவிக்கப்பட்டு மாவட்ட, மாநில, அகில இந்திய அளவிலானபோட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகின்றனர்.
கடந்த 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி 2015-ம் ஆண்டு பவள விழாவை கொண்டாடியது. 2015-ம் ஆண்டுக்கான ஐஎஸ்ஓ 9001 சர்வதேச தரச்சான்றிதழையும் பெற்றது.
மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் கல்விச் சீர் வழங்கப்பட்டு வருகிறது.
உழைப்புக்கு அங்கீகாரம்
பள்ளியைப் பற்றி தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் கூறியபோது, கரூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் அதிக அளவாக இப்பள்ளியில்தான் 220 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2005-ல் 104 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கையை 220 என உயர்த்தியுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய விருதுகளை எனது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்றார்.