‘‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் அல்ல; உதவி தான்’’ – நிலைப்பாட்டை மாற்றியது அமெரிக்கா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இதுவரை கூறி வந்த அமெரிக்க தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இருநாடுகளுக்கும் உதவி செய்ய மட்டுமே விரும்புவாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பு 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.ஆனால், ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரம். இதில் மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஆகஸ்ட் 25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரீஸ் நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை திருத்தம் செய்தது இந்தியாவின் உள்விவகாரம். எனினும் இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றம் ஆகியவை பற்றி மட்டுமே அமெரிக்கா கவலைப்படுகிறது.

இந்த பிரச்சினையில் உதவி செய்வதற்கு மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். அதுவும் இருநாடுகளும் விரும்பினால் மட்டுமே அதனை செய்ய முன் வருவோம்’’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.