கோர்ட்டில் சிதம்பரம் மகன், மருமகள் இன்று ஆஜர்?

வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில், கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி, நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை, அக்னி எஸ்டேட் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர்.ஓர் ஏக்கர் நிலத்தை, 4.25 கோடி ரூபாய் என்ற விலையில் விற்றுள்ளனர். விற்பனை ஒப்பந்தம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஒப்பந்தத்தில், 1 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு, 3 கோடி ரூபாய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மீதமுள்ள, 1.25 கோடி ரூபாயை ரொக்கமாக பெறப்பட்டுள்ளது.இது போல், பல ஏக்கர் நிலம் விற்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ஸ்ரீநிதி, 1.35 கோடி ரூபாயும், கார்த்தி, 6.38 கோடி ரூபாயும், ரொக்கமாக பெற்றுள்ளனர்.

இந்த பண பரிமாற்றத்தை, தங்கள் ஆண்டு வருமான கணக்கில், அவர்கள் காண்பிக்கவில்லை.இது தொடர்பான வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு, இதற்கு முன், நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, கார்த்தி, ஸ்ரீநிதி இருவரும் இன்று ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.இதன்படி, இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., ஊழல் வழக்கில்கிடுக்கிப்பிடி விசாரணை

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதில் நடந்த ஊழல் தொடர்பாக, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்ட சிதம்பரம், 100 நாள்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, ஜாமினில் உள்ளார். இந்த வழக்கில், தமிழகத்தின் சிவகங்கை எம்.பி.,யான கார்த்தியும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இருவரிடமும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பலமுறை விசாரணை நடத்தியுள்ளன.இந்த நிலையில், இந்த ஊழலில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கில், கார்த்தியிடம் அமலாக்கத் துறை நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது.டில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கிடைத்துள்ள புதிய ஆதாரங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், விசாரணை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.