நம் தமிழ்நாட்டின் பொக்கிஷமே அதன் புராதனமும் புனிதமும். கலைநுணுக்கமும் கொண்ட கோயில்கள்தான். தெருமுனை பிள்ளையார் கோயில்களிலிருந்து வானளாவிய கோபுரங்களையும் பிரம்மாண்டமான பிரகாரங்களையும் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. நமது முன்னோர்கள், மன்னர்கள் கோயில்களைக் கட்டியது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதன் பூஜைக்காகவும் பராமரிப்புக்காகவும் ஏராளமான நிலம், சொத்து இவற்றை கோயில் பெயரில் எழுதி வைத்தனர்.
ஹிந்துக்களில் பக்திக்கு ஒன்றும் குறைவில்லை. திருவண்ணாமலை கார்த்திகை தீபம், திருவாரூர் தேரோட்டம், திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என பல திருவிழாக்களில் பக்தர்கள் கோயில்களில் குவிகின்றார்கள்.
கோயிலுக்குப் போகிறோம், சாமி கும்பிடுகிறோம். நமது வேண்டுதல், பிரார்த்தனையோடு திரும்பி வந்துவிடுகிறோம். நம்மில் யாரும் இந்த கோயில் நிலமும் சொத்தும் கபளீகரம் செய்யப்படுவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
கோயில்களைப் பராமரிக்க அரசு ஹிந்து அறநிலையத்துறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆனால் அந்த அமைப்பில் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும், சுயநலவாதிகளும்தான் ஏராளமானோர் உள்ளனர்.
சமீபத்தில் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களுக்கு பட்டா போட்டு வழங்க தீர்மானித்துள்ளது. இது ஆபத்தானது. அரசு தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாணை வெளியிட்டு கோயில் சொத்தினை வாரி வழங்குவது கிரிமினல் மோசடி.
தமிழக அரசுக்கு மசூதி சொத்து மீதோ, சர்ச் சொத்து மீதோ கை வைக்க உரிமை உண்டா? ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பது போல ஹிந்துக்கள் மட்டும்தான் இவர்களுக்கு இளிச்சவாயர்கள் என்று தோன்றுகிறது.
தமிழக அரசு தனது அரசாணையை வாபஸ் வாங்க வேண்டும். சாமி கும்பிடுவது மட்டுமல்ல, பக்தி… நாம் வணங்குகிற கோயிலை பாதுகாக்க வேண்டும் என்பதும் பக்திதான்.