கோயிலில் பணி செய்யும் பெண்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்

சென்னை, ஓட்டேரியில் உள்ள அருள்மிகு செல்லப் பிள்ளைராயர் கோயிலில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியனின் சென்னை கோட்ட நிர்வாகிகள் மற்றும்கிளை நிர்வாகிகளுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னை கோட்டத் தலைவர் சு.தனசேகர் தலைமை தாங்கினார். மாநில மகளிரணிச் செயலாளர் செந்தமிழ் செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோயில்களில் பணியாற்றும் உழைக்கும் பெண்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 23-ம் தேதி நடத்தப்படும். சென்னையில் சாதனைப் பெண்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அரசு பணியாளர் போன்று திருக்கோயிலில் உழைக்கும் பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும். கர்ப்பிணிகள் அலுவலகத்தில் வசதியாக உட்கார்ந்து பணிகளை கவனிக்க பிரத்யேக இருக்கைகள் செய்துதர வேண்டும்.
குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி முறையாக செய்து தர வேண்டும்.பெண் பணியாளருக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மகளிரணி சென்னை கோட்ட துணைச் செயலாளர்களாக அமிர்தா மற்றும் மகேஸ்வரி, திருவொற்றியூர் ஆர்.கே.நகர் ராயபுரம் கிளைச் செயலாளராக மைதிலி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.